தற்போதைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சி தான் தமிழகத்தில் நீடிக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் திட்டவட்டம்…

தூத்துக்குடி:-

வாய்க்கு வந்தபடி உளறும் மு.க.ஸ்டாலினை மக்கள் ஏற்க மாட்டார்கள். எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான நல்லாட்சி தான் தமிழகத்தில் நீடிக்கும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் உள்ள ஓட்டப்பிடாரம் தலைமைக் கழக தேர்தல் பணிமனையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், விளம்பரம் மற்றும் செய்தித் துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலையில் வாக்குசாவடி பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும், உணவுத்துறை அமைச்சமான ஆர்.காமராஜ் பேசியதாவது:-

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கழக வேட்பாளர் மோகனை எதிர்த்து போட்டியிடும் அத்தனை வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும். கழக வேட்பாளர் மோகனை இரட்டை இலை சின்னத்தில் அமோகமாக வெற்றி பெற வைத்து ஓட்டப்பிடாரம் தொகுதி என்றுமே அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்கப் பாடுபடுவோம்.

புரட்சித்தலைவி அம்மா கூறியது போல் தமிழகத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சி தான் நூறு ஆண்டுகள் ஆட்சி செய்யும். புரட்சித்தலைவி அம்மாவின் வாக்கை செயல்படுத்தும் வகையில் தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஆட்சியாக புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை சிறப்பாக வழி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அம்மாவின் நல்லாட்சி தான் இனி என்றும் தமிழகத்தை ஆட்சி செய்யும்.

சமீப காலமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பகலிலும் இரவிலும் எந்த நேரம் ஆனாலும் தான் முதல்வராக ஆகிவிட்டது போல் பதவி மோகத்தில் உளறி வருகிறார். அவர் என்றும் கனவில் தான் முதல்வர் ஆவாரே தவிர, நிஜமான வாழ்க்கையில் முதல்வராக ஸ்டாலினை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

தற்போது மாப்பிள்ளையூரணி கிராமத்தில் 40 வாக்கு சாவடிகள் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் 6 வாக்கு சாவடிகள் தூத்துக்குடி மாநகரத்தில் 5 வாக்கு சாவடிகள் மொத்தம் 51 வாக்கு சாவடி பகுதிகளிலும் ஏற்கனவே உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான கழகத்தினர் மேற்கண்ட பகுதிகளில் தேர்தலில் பணியாற்றக் கூடிய வகையில் அனைத்து கட்டமைப்பு பணிகளையும் செய்துள்ளனர்.

நாம் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் என்னவென்றால் மேற்கண்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று அம்மாவின் நல்லாட்சி சாதனைகளை எடுத்துக்கூறி இரவு பகல் பாராது கழகத்தினர் மக்கள் பணி செய்து 51 வாக்குச்சாவடி பகுதியில் உள்ள அத்தனை வாக்குகளும் இரட்டைஇலை சின்னத்திற்கு 100 சதவீதம் கிடைத்திட நாம் பாடுபட வேண்டும். நான்கு தொகுதிகளிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்த கூட்டத்தில் தாய்கோ வங்கி மாநில துணைத்தலைவர் குற்றாலம் என்.சேகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் மில்க் இயக்குனர் நீலகண்டன் பரும்புகோட்டை, பாலமுருகன் தூத்துக்குடி ஒன்றிய கழக செயலாளர் சண்முகவேல், தூத்துக்குடி புதுக்கோட்டை யூனியன் முன்னாள் தலைவர் வீ.பி.ஆர்.சுரேஷ், மாப்பிள்ளையூரணி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வின்சென்ட், முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், ஜான்சன், தேவராஜ், ச.ம.க மாவட்ட செயலாளர் வில்சன் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.