தற்போதைய செய்திகள்

எதிரிகள் – துரோகிகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள் – வாக்காளர் பெருமக்களுக்கு அமைச்சர் பி.தங்கமணி வேண்டுகோள்…

நாமக்கல்

இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு எதிர்க்கட்சிகள் இல்லாமல் போய்விடும். துரோகிகளுக்கும் வேலை இல்லாமல் போய்விடும் என்று குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம், கழக வேட்பாளர் வெங்கு மணிமாறன் அறிமுக கூட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்

இக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

தமிழகத்தில் இருக்கின்ற கட்சிகளில் பெரிய கட்சி கழகம் தான். இந்த இயக்கம் தான் மக்களுடைய இயக்கம். இதுதான் ஏழைகளின் ஆட்சி என்று சொல்கின்ற அளவிற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார். இதன் காரணத்தினால் இந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும். இந்த இயக்கம் தான் தமிழக மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கம் என்ற அடிப்படையில் இன்று நம்மோடு பல்வேறு தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்து இருக்கின்றார்கள்.

இந்த இயக்கத்தைப் பொறுத்தவரை அம்மா மறைந்து அதற்குப் பின் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் பலபேர் ஆருடம் கூறினார்கள். இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி கலைந்து விடும். இரண்டு மாதத்தில் ஆட்சி கலைந்து விடும். ஒரு வருடத்தில் கலைந்து விடும் என்று தினந்தோறும் ஒரு ஜோதிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அம்மாவுடைய நல்லாசி நம்மோடு இருக்கின்ற காரணத்தினால் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்கின்ற காரணத்தினால் ஏழரை கோடி தமிழக மக்களின் ஆதரவோடு இந்த இயக்கம் அம்மா இல்லாத போதும் இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இயக்கமாக வளர்ந்து இருக்கிறது.

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கே தொண்டர்கள் இருக்கின்ற காரணத்தினால் இந்த வெற்றியை நாம் பெற்றிருக்கின்றோம். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்த வெற்றியைப் தந்து இருக்கின்றார். ஆக இந்த இயக்கத்தை உருவாக்கிய புரட்சித்தலைவர் நம்மிடம் இல்லை கட்டிக்காத்த அம்மா அவர்கள் நம்மிடம் இல்லை. கழகத்தில் இருக்கின்ற தொண்டர்களை காப்பாற்ற தலைவர்கள் இல்லை. இந்த இயக்கம் பிளவுபட்டு விட்டது. ஆக நாம் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காக துரோக கும்பலும் எதிரிகளும் ஒன்றுசேர்ந்து இந்த ஆட்சியை கலைப்பதற்காக என்னென்னவோ செய்தார்கள். அதனால் தான் இப்பொழுது 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.

ஆகவே ஆட்சி நீடிக்கவேண்டும் என்று சொன்னால் தமிழகத்தில் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை அதை கலைக்க வேண்டும் என்று சொன்னால், அதை எதிர்த்து 118 பேரும் வாக்களித்தால் தான் ஆட்சி போகும். ஆனால் 18 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு நமக்கு யார் எதிரி அம்மாவிற்கு இந்த நிலை வந்ததற்கு யார் காரணம். வழக்கை போட்டு இந்த அளவிற்கு சோதனையை உருவாக்கியவர்கள் யார்? அம்மா அவர்கள் இருக்கின்ற போதும் சரி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இருக்கின்ற போதும் சரி, அவர்கள் அடையாளம் காட்டிவிட்டு சென்றபடி திமுக தான் நமக்கு எதிரி என்று ஒவ்வொரு தொண்டனும் அறிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால் அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு அம்மாவுடைய ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதற்காக இந்த இரண்டு ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை பல்வேறு வகையிலே இந்த ஆட்சிக்கு பல்வேறு இடையூறுகளை கொடுத்ததை நீங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். அதை எல்லாம் வெற்றிகரமாக முறியடித்து இன்றைய தினம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கின்றோம். நான் ஏற்கனவே கூறியது போல தொண்டர்களுடைய ஆதரவும் அம்மாவுடைய நல் ஆசியும் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த ஆட்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டு காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அம்மா அவர்கள் எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் நூறாண்டு காலம் இருக்கும். ஆட்சியும் இருக்கும் என்று கூறியிருக்கின்றார். ஆக ஒரு தலைமை இல்லாத இயக்கம், ஒரு தலைமை இல்லாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் இவர்களோடு யார் கூட்டணிக்கு செல்வார்கள், இந்த ஆட்சி நாடாளுமன்றத் தேர்தலோடு முடிந்து விடும். எங்கள் கைக்கு கழகம் வந்துவிடும். ஆட்சி திமுகவிடம் சென்றுவிடும் என்று ஒரு பொய் பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் தான் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து இந்த மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த இயக்கம் தான் உண்மையான அ.இ.அ.தி.மு.கழகம் என்று சொல்கின்ற வகையில் கூட்டணிக்கு முதன்முதலாக வந்தது டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ். ஆக இந்த இயக்கத்திற்கு தலைமை இல்லை என்ற காரணத்தினால் யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள். இவர்கள் இந்த தேர்தலோடு முடிந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள். அதற்கும் முதல் முற்றுப்புள்ளியாக டாக்டர் ராமதாஸ் நம்முடைய கூட்டணியில் இணைந்து மத்தியிலே ஒரு நிலையான தலைமை வேண்டும். நாட்டில் பிரதமர் என்று சொன்னால் நரேந்திரமோடி தான் என்று நாம் வாக்குகள் கேட்கின்றோம்.

ஆனால் எதிர்க்கட்சியிலே யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லாமல் வாக்குகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம்முடன் கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்தது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நலமில்லாமல் வெளிநாட்டில் இருந்தார். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தோம். அவர் வந்ததற்கு பின்னால் கூட்டணி ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்று இருந்த காலகட்டத்தில் தி.மு.க.வினர் இந்த கூட்டணியை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று தே.மு.தி.க.வினர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால் விஜயகாந்த் உறுதியாக இருந்தார்.

நம்முடைய கூட்டணி என்று சொன்னால் அது அ.இ.அ.தி.மு.கவுடன் தான் இருக்க வேண்டும். அம்மா அவர்கள் 2016-ம் ஆண்டு இந்த கூட்டணியை அமைத்து இருக்கின்றார்கள். ஆக இந்த சீட்டு முக்கியமில்லை. தமிழக மக்களின் நலன் தான் முக்கியம் என்று விஜயகாந்தும் நம்மோடு வந்து விட்டார். அதற்குப் பின்னால் புதிய நீதிக் கட்சி, ஜான்பாண்டியன் கட்சி, சரத்குமார் வரை இந்த கூட்டணிக்கு வந்துவிட்டார்கள். நான் சொல்வது எதற்காக என்றால் இந்தக் கூட்டணி இந்த அளவிற்கு அமைகிறது என்று சொன்னாலே இந்த இயக்கம் தான் வெற்றி பெறப்போகிறது. 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெறக்கூடிய கூட்டணி அனைவருமே ஒருமித்த கருத்தோடு அமைந்த கூட்டணி.

இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்திருக்கின்ற காரணத்தினால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் முதன்முதலாக டாக்டர் ராமதாஸ் கூட்டணியில் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். தமிழகத்திலே ஒரு வரலாறு இருக்கின்றது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட நாகரீகமாக தான் பேசுவார்கள். ஆனால் நம்மோடு வரவில்லையே என்ற ஒரு ஆதங்கத்தில் அடுத்த நாள் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் தலைவரைப் பார்த்து தமிழகத்திலே இதுவரைக்கும் இல்லாத ஒரு வார்த்தையாக சூடு சொரணை வெட்கம் இல்லாத தலைவர் என்று பேசுகின்றார்.

அது அவரின் கோபத்தின் வெளிப்பாடு. அவர்கள் நன்றாக கூட்டணி அமைத்து விட்டார்கள். இங்கே நாம் முதலமைச்சராக வரவேண்டும் என்று கனவு கண்டு இருக்கின்றோம். அந்த கனவு கனவாகவே போய் விடுமோ என்று அந்த ஆத்திரத்தில் அந்த வார்த்தையை ஸ்டாலின் வெளிப்படுத்தி இருக்கின்றார். திமுக-வினர் எந்த அளவுக்கு எதிர்பார்ப்போடு இருந்தார்கள். அதையெல்லாம் முறியடித்து இன்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரு மெகா கூட்டணியை அமைத்து இருக்கின்றார்கள்.

இந்த மெகா கூட்டணி அமைத்து இருப்பது நாடாளுமன்றத் தேர்தலில் யாரை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக. அதேபோல இதயதெய்வம் அம்மா கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னந்தனியாகவே நின்று 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக கழகத்தை அம்மா அவர்கள் தன்னந்தனியாக இருந்து உருவாக்கித் தந்தார். இன்று ஒரு துரோகி, இந்த இயக்கத்தை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றார். ஆக இதையெல்லாம் முறியடிக்க வேண்டும் என்பதற்காக இந்த மெகா கூட்டணியை அமைத்து இருக்கின்றோம்.

இப்பொழுது பிரதமர் வேட்பாளராக இருக்கின்ற நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். ஒரு நாட்டிற்கு வலிமையான தலைவர் வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அண்டை நாடுகள் எல்லாம் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு வலிமையான தலைவர் இருக்கின்ற காரணத்தினால் தான் கடந்த 2 மாதத்திற்கு முன் நடந்த சம்பவத்தை எப்படி முறியடித்திருக்கிறார் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

எதிர்க்கட்சியை பொறுத்தவரை ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என்று அவருடைய தந்தை கருணாநிதி சிலைத்திறப்பு விழாவில் பேசினார். அதற்குப் பின்னால் ஒரு மாதம் கழித்து மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டம் நடத்தினார்கள். அந்த எதிர்க் கட்சி கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ராகுல் பிரதமர் என்று கூறவில்லை. வேறு யாருமே சொல்லவில்லை. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஸ்டாலின் சொன்னதற்கு பின்னால் தமிழகத்தில் இருக்கின்ற காங்கிரஸ் தலைவர்கள் கூட ராகுல் தான் பிரதமர் என்று கூறவில்லை. அந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?

நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றால் தான் அங்கே நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் தான் மத்தியிலேயே இருக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும் நாம் பெற முடியும். அம்மா இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இன்னும் இருப்பது இருபது நாட்கள் மட்டுமே இந்த இருபது நாட்களும் கடுமையாக உழைத்து இந்த தேர்தலிலே பெரிய வெற்றியைப் பெற்று விட்டோம் என்றால் அடுத்து வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு எதிரி திமுக. கடைசிவரை தீயசக்தி கருணாநிதி என்று அடையாளம் காட்டியது உங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இப்பொழுது அவர்களுடன் துரோக கும்பலும் சேர்ந்து கொண்ட காரணத்தினால் நாம் இரண்டு பக்கமும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த தேர்தல் எதிரிக்கும் துரோகிக்கும் பாடம் புகட்டுகின்ற தேர்தல். ஆக இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு எதிர்க்கட்சி இல்லாமல் போய்விடும். துரோகிகளுக்கும் வேலை இல்லாமல் போய்விடும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.