மதுரை

எதிரி- துரோகிகளுக்கு டெபாசிட் கிடைக்காது – மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

மதுரை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக, அமமுக டெபாசிட் இழப்பது உறுதி என்று மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா உறுதிபட கூறினார்.

மதுரை புறநகர் மாவட்டம் கிழக்கு தொகுதியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தக்கார் பாண்டி தலைமை தாங்கினார். மதுரை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.முருகேசன் முன்னிலை வகித்தார். பகுதி கழக செயலாளர்கள் திருப்பாலை ஜீவனாந்தம், வண்டியூர் முருகன் ஆகியோர் வரவேற்றனர்.

மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:-
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காக வாழ்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தற்போது அம்மா நம்மிடம் இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் விட்டுச் சென்று வானத்தின் தேவதையாக இருந்து நம்மை வழி நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று எதிர்கட்சிகள் சதி செய்த போது, அதையெல்லாம் முறியடித்து ஆட்சியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

தற்போது 40 தொகுதிகளிலும் கழகத்துடன் தோழமைக் கட்சியினர் போட்டியிடுகின்றனர். இந்த 40 தொகுதிகளிலும் முதன்மை தொகுதியாக நாம் விளங்க வேண்டும். குறிப்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் இந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வாக்காளரிடம் கழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். நமது திட்டங்கள் இல்லாத வீடுகள் எங்கும் கிடையாது. அதனால் மக்களே நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.

இந்த தேர்தலில் திமுகவும், அமமுகவும் நமக்கு எதிரிகளாக உள்ளனர். திமுக நமக்கு என்றைக்கும் எதிரி தான். ஆனால் அமமுக நமக்கு துரோகி. இந்த தேர்தலில் எதிரிக்கும், துரோகிக்கும் தகுந்த பாடங்களை புகட்டுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காத வகையில் நாம் பணியாற்ற வேண்டும்.
அது மட்டுமல்லாது, இந்த கிழக்கு தொகுதி, மதுரை நாடாளுமன்ற தொகுதியில் உள்ளடங்கியது. மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தாலும், அதிகப்படியாக வாக்குகளை கழகத்திற்கு பெற்றுத் தந்தது இந்த கிழக்கு தொகுதி தான் என்று வரலாற்றில் இடம் பெறும் வகையில் நீங்கள் அயராது பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்டக் கழக அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, மாவட்டக்கழக பொருளாளர் அம்பலம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா, பொதுக்குழு உறுப்பினர்கள் தனம் போஸ், இரா.முத்துக்குமார், ஒன்றியக் கழகத் துணை செயலாளர் முருகன், முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் கள்ளந்திரி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.