தற்போதைய செய்திகள்

எதிர்கட்சிகளின் சூழ்ச்சிக்கு துணை போக வேண்டாம் – வாக்காளர்களுக்கு சரத்குமார் வேண்டுகோள்…

சென்னை:-

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போக வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு நடிகர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் நேற்று பெரம்பூர் 36-வது வட்டம் முல்லை நகரில் தீவிர பிரச்சாரம் செய்தனர். இதனைத்தொடர்ந்து கொடுங்கையூர் பள்ளிக்கூட சாலை அருகில் உள்ள காந்தி சிலை, எம்.ஆர்.நகர் மீன் மார்க்கெட், பாரதி நகர், சாஸ்திரி நகர், பி.வி.காலனி, எஸ்.ஆர். பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.

பிரச்சாரத்தின்போது நடிகர் சரத்குமார் பேசியதாவது:-

எதிர்கட்சிகளின் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள், துணை போக வேண்டாம், தமிழகத்தில் மிக நல்ல கூட்டணியான மெகா கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும். கச்சத்தீவு, காஷ்மீர் பிரச்சினை, இலங்கை இனப்படுகொலை மற்றும் காவேரி நீர் பிரச்சினைகள், இந்தி மொழி போராட்டம் உள்ளிட்டவைகள் மோடி அரசால் ஏற்பட்டதல்ல. இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியால் ஏற்படுத்தப்பட்டவை.

திமுக சந்தர்ப்பவாத கூட்டணி. 15 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் பெற்றிருந்த அவர்களால் மக்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை. மேலும் அம்மா திட்டம், மகப்பேறு விடுப்பு, தாலிக்கு தங்கம், மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிகணினி, உள்ளிட்ட பல எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து தமிழக மக்களுக்கு செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான நல்லாட்சியில் வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் மோகன்ராஜ், முரசு சின்னத்திற்க்கும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், இரட்டை இலை சின்னத்திற்கு, வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்

இவ்வாறு நடிகர் சரத்குமார் பேசினார்.