தற்போதைய செய்திகள்

எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரம் எடுபடாது : பொள்ளாச்சி சி.மகேந்திரன் மாபெரும் வெற்றி பெறுவார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை….

கோவை:-

கழக அரசின் திட்டங்களால் பயனடையாத குடும்பங்களே கிடையாது. எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம் எடுபடாது. எனவே பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.மகேந்திரன் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சி.மகேந்திரன் அறிமுக கூட்டம் பொள்ளாச்சி முருகன் மகாலில் நடைபெற்றது. கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வேட்பாளரை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி அமைய தமிழகத்தில் கழகத்தின் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் வேட்பாளரே யார் என்றே தெரியாமல் திமுகவினர் கூட்டணி அமைத்து தவித்து வருகின்றனர்.புரட்சித்தலைவி அம்மா அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழக அரசு நிறைவேற்றியுள்ளது.

50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை கோவை மாவட்டத்திற்கு கழக அரசு தந்துள்ளது. அத்திக்கடவு- அவினாசி திட்டம், கூட்டு குடிநீர் திட்டம், மேம்பாலங்கள், சாலைகள், அடிப்படை வசதிகள் என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா தலைமையில் கழகம் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அமைத்துள்ள வலிமையான கூட்டணி மூலம் 40 தொகுதிகளிலும் கழக கூட்டணி வெற்றி பெறும். கழக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக கழகம் விளங்கும்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு திட்டங்கள் கழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடும் சி.மகேந்திரன் இத்தொகுதிகளுக்கு செய்துள்ள பணிகள் வரலாற்று சிறப்பு மிக்கவை. வேட்பாளர் மகேந்திரன் எம்.பி.யாக இருந்தபோது நாடாளுமன்ற நிதி முழுவதையும் பொள்ளாச்சி தொகுதிக்கு பயன்படுத்தி எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார். தமிழக தென்னை விவசாயிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து விவசாயிகளின் நம்பிக்கையை பெற்றவர்.

உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புறவழிச்சாலை, சாலைகளை அகலப்படுத்துதல், மையத்தடுப்பான், பாலங்கள் விரிவாக்கம், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், நடைபாதை, ரவுண்டானா, உயர் மட்ட பாலம் என எண்ணற்ற பணிகளை செயல்படுத்தியுள்ளார். பொள்ளாச்சி முதல் கோவை வரை முழுக்க முழுக்க சிமெண்ட் கான்கிரீட் கொண்ட நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை தானமாக அளித்து மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைய பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.

மேலும் கழக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்றையாவது ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்று பயனடைந்திருப்பார்கள். ஆகவே நிலையான, வலிமையான ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிரமாக பணியாற்றுங்கள்.இத்தொகுதியில் நமது வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் என்றுமே எடுபடாது. பொள்ளாச்சி தொகுதி கழகத்தின் கோட்டை. இத்தொகுதியில் கழக வேட்பாளர் சி.மகேந்திரன் பல லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் ஆகியோரும் பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் வி.கிருஷ்ணகுமார், மாவட்ட கழக நிர்வாகிகள் ஏ.வெங்கடாசலம், என்.ஆர்.ராதாமணி, என்.எஸ்.கருப்புசாமி மற்றும் கூட்டணி கட்சிகளான பா.ஜ.க.வின் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆர்.சிவக்குமார், ஒன்றிய பொறுப்பாளர் ரகுபதி, பா.ம.க. நிர்வாகிகள், த.மா.கா.வின் மாவட்ட தலைவர் குணசேகரன், நகரத் தலைவர் சுப்புராயன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பி.கே.தினகரன், பொள்ளாச்சி நகர செயலாளர் கணேசன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஹக்கீம்,புதிய தமிழகம் நிர்வாகிகள், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் மாவட்ட மாவட்ட செயலாளர் ஜெயசூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.