தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் – அமைச்சர் பா.பென்ஜமின் சபதம்

காஞ்சிபுரம்:-

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஏற்பாட்டில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் கே.என்.ராமசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கழக இணை செயலாளர் லீலாவதி அகோரம், மாவட்ட துணை செயலாளர்கள் எ.யஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் பி.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

தமிழகத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அம்மாவின் வழியில் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். அதனுடைய வெளிப்பாடுதான் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி வெற்றி. மக்களால் ஏற்றுக் கொள்ளபட்ட, மக்களின் பேராதரவை பெற்ற இயக்கம் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலமாக தான் அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. அதனால் கழகத்தினர் உள்ளாட்சிகளில் அதிக இடங்களை பெற வேண்டும்.

மேலும் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கிட வேண்டும். திமுகவின் பொய் பிரச்சாரங்களுக்கு இடம் தரக்கூடாது. உள்ளாட்சி தேர்தலில் நாம் பெறும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்காளர் பட்டியலில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று கண்டறிந்து அதனை உடனடியாக சரி பாருங்கள். பதினெட்டு வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேருங்கள், இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்து சென்றவர்களை கண்டறிந்து உடனடியாக அவர்களது பெயர்களை நீக்க வேண்டும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் உள்ளாட்சி பிரதிநிதிகளாகும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு மாவட்டமாக அறிவித்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைகழகத்திற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.