தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து கழகம் அமோக வெற்றி பெறும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி…

மதுரை

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து கழகம் அமோக வெற்றி பெறும் என்று திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதிபட கூறினார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் கழக தகவல் தொழில்நுட்பபிரிவு இணை செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மதுரை புறநகர் மாவட்ட இளைஞர்அணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்

பிரச்சாரத்தின்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் தேர்தலில் தற்போது அமமுகவும், திமுகவும் எப்படியாவது டெபாசிட் வாங்கி விட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். நீங்கள் வாக்காளர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் நிச்சயம் தோல்வியைத்தான் பெறுவீர்கள்.

இங்குள்ள முருகப்பெருமான் எப்போதும் நல்லவர்களுக்கு துணையாக இருப்பார். அதனால் இந்த தேர்தலோடு நிச்சயம் திமுக, காணாமல் போய்விடும். கமலுக்கு அரசியல் அரிச்சுவடே தெரியாது. சினிமாவில் அவர் பட்டம் பெற்றிருக்கலாம். அதன் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கலாம். ஆனால் அரசியல் அவருக்கு ஒத்து வராது. அவர் அரசியலை விட்டு கலைத்துறைக்கே மீண்டும் சென்று விடலாம்.

ஸ்டாலின் தன்னை அகில இந்திய தலைவராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கென்று நிலையான கருத்து கிடையாது. உண்மையான காங்கிரஸ்காரர்கள் யாரும் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள். மே 23-க்கு பிறகு இந்த ஆட்சி இருக்காது என்று ஸ்டாலின் கூறிவருகிறார். நிச்சயம் நான் சொல்கிறேன். திமுக என்ற கட்சியே இல்லை என்ற நிலையை மக்கள் உருவாக்குவார்கள். இதன் மூலம் திமுககவே சிதைந்து போய்விடும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.