தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் கழக மக்களிடம் எடுபடாது – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேச்சு…

திருவண்ணாமலை:-

கழக அரசின் சாதனைகளை நாம் சொன்னால் போதும், எதிர்க்கட்சியினர் என்ன கூறினாலும் அது மக்களிடம் எடுபடாது என்று ஆரணியில் நடைபெற்ற அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

ஆரணியில் நடைபெற்ற அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

தேர்தல் பணிகளில் எப்போதும் பேரவை நிர்வாகிகள் சிறப்பான களப்பணியாற்றுவார்கள். கடந்த தேர்தலின் போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பேரவை நிர்வாகிகள் 15 பேருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, வந்தவாசி, போளூர் தொகுதிகளில் மூன்று நபர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். அதில் நானும் ஒருவன். 2015-ல் கழக அரசின் சாதனைகளை விளக்கி பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

கடந்த 4 மாதத்திற்கு முன்பு பேரவை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 நாட்கள் 1250 சைக்கிள்களில் 3000 கழகத்தினருடன் கழக அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரணிக்கு வருவாய் கோட்டம் வழங்கிய வருவாய்த்துறை அமைச்சருக்கு இக்கூட்டம் மூலம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆரணியில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் முழு உருவச்சிலை நிறுவ 6 அமைச்சர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் அனுமதி பெற்று தந்தார். இதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பேரவை சார்பில் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தமிழகமெங்கும் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

ஆரணியில் நடப்பது 4-வது கூட்டம். அம்மாவின் 71வது பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் கழக கொடி கம்பங்களுக்கு வர்ணம் தீட்டி புதிய கொடியை ஏற்ற வேண்டும். தங்கள் பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணியில் புரட்சித்தலைவர், அம்மா ஆகியோரின் சிலைகளை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் திறந்து வைக்கவுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியை சேர்ந்த 25000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

மக்களுக்கு பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.1000 வழங்கினார் முதல்வர். இதனால் தமிழகமெங்கும் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். மேலும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 60 லட்சம் பேருக்கு ரூ. 2000 வழங்கியதால் பொதுமக்கள் மேலும் இன்பஅதிர்ச்சியில் உள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகப்பணியை சிறப்பாக செய்து கழகத்தை வெற்றிபெற செய்ய வேண்டும். கழக அரசின் சாதனைகளை கூறினால் போதும். எதிர்க்கட்சியினர் என்ன கூறினாலும் அது மக்களிடம் எடுபடாது. மக்களால் கழக அரசை குறை கூற முடியாது. வரும் தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.