சிறப்பு செய்திகள்

எதிர்க்கட்சிகளை சிதறடித்து 40 தொகுதிகளிலும் கழகக் கூட்டணி வெற்றிபெறும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சூளுரை…

கோவை:-

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை சிதறடித்து 40 தொகுதிகளிலும் கழக கூட்டணி வெற்றிபெறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71 ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை செல்வபுரத்தில் நடைபெற்ற விழாவில் கழக அமைப்பு செயலாளர், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தமிழக மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் எண்ணற்ற திட்டங்களை தந்தும், அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புனித பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு போன்றவற்றில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா. தாலிக்கு தங்கம், மானிய விலையில் பெண்களுக்கு இருசக்கர வாகனம், கல்வி உபகரணங்கள் என பல்வேறு திட்டங்களை தந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார் புரட்சித்தலைவி அம்மா. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை தமிழகமெங்கும் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

கழக ஆட்சியில் கோவை மாவட்டம் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை பெற்றுவருகிறது. மேலும் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1652 கோடியில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டி வரலாற்று சாதனை படைத்துவிட்டார். மேலும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அதிகளவில் வீடுகள் கட்டி கொடுத்த மாவட்டமாக கோவை விளங்குகிறது. மேலும் நீண்ட நாட்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வரும் ஏழை எளியோருக்கு இலவச வீடு வழங்கவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொண்டாமுத்தூர், குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் நடைபெற்ற லோன் மேளாவில் 3120 பேருக்கு சுமார் 35 கோடி ரூபாய்க்கான கடனுதவி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களின் வாழ்க்கையில் முன்னேறவும், அவர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கி தொழில்முனைவோராகவும் வாய்ப்பை தந்துள்ளது. மேலும் லோன் மேளாவில் பங்கேற்ற 98 பேருக்கு தொழில்முனைவோர்களுக்கான கடனுதவியாக 47 லட்சம் இன்று வழங்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மாணவ, மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி அளித்து அவர்களின் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவினை நனவாக்கும் வகையில் ‘அம்மா ஐஏஎஸ் அகாடமி” துவக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.1000 அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தினார். இதை தொடர்ந்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்கவும் ஆணையிட்டுள்ளார். இதுபோன்ற கழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையவேண்டும் என்பதே நோக்கமாகும்.

யாருடன் கூட்டணி வைத்தாலும் கழகத்தின் கொள்கை மாறாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க யாருடன் கூட்டணி வைத்தாலும் நமது கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். சிறுபான்மையினருக்கு பாதுகாவலனாக கழகம் விளங்கும். ‘ எதிர்க்கட்சிகளை சிதறடித்து ஓடச் செய்யும் வகையில் சிறப்பான கூட்டணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமைத்துள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இக்கூட்டணி 40 தொகுதியிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷரவன் குமார் ஜடாவத், துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) காந்திமதி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர், மாவட்ட கழக இணைச்செயலாளர் மணிமேகலை, பகுதி செயலாளர் பி.கே.சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ஆர்.சசிக்குமார், முன்னாள் பகுதி செயலாளர் எம்.சின்னத்துரை, லட்சுமிகாந்தன், வார்டு செயலாளர்கள் கே.ஏ.காட்டுதுரை, டி.ஏ.பெருமாள், அப்துல்ரகுமான், ஜே.கே.கண்ணையன், ஜி.தர்மராஜ், கரும்புக்கடை முஜி, ஏ.எம்.சித்திக், சுப்பையா, கேபிள் சரவணன், அன்பழகன், மற்றும் முருகேசன், லதா முருகேசன், கோமதி காட்டுதுரை, குஞ்சாலி, சரவண பொஹரா, சாய் ஷியாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.