இந்தியா மற்றவை

எதிர்க்கட்சிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி…

ஜாம்நகர்:-

பிரதமர் நரேந்திரமோடி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட மோதலின்போது ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால், முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வேறுவிதமான முடிவு என்றால் எப்படி? என்றும், பிரதமரே இந்திய விமானப்படையின் வலிமை பற்றி கேள்வி எழுப்புகிறார் என்றும் கூறின.

இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இதற்கு விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரபேல் விமானம் உரிய காலத்தில் வாங்கியிருந்தால், கடந்த 27-ந் தேதி பாகிஸ்தான் விமானங்கள் எல்லைதாண்டி வந்தபோது நடந்த தாக்குதலில் அது வேறுவிதமான முடிவை ஏற்படுத்தி இருக்கும் என்று தான் நான் கூறினேன். ஆனால் எதிர்க்கட்சிகள் மோடி இந்திய விமானப்படை தாக்குதலை கேள்வி எழுப்புகிறார் என்று சொல்கிறார்கள்.

தயவு செய்து பொது அறிவை பயன்படுத்துங்கள். நான் சொன்னது என்னவென்றால், நம்மிடம் ரபேல் விமானங்கள் இருந்திருந்தால் இருநாட்டு போர் விமானங்களும் தாக்குதலில் ஈடுபட்ட நேரத்தில் நமது விமானம் எதுவும் கீழே விழுந்திருக்காது, அவர்களில் ஒருவர் கூட காப்பாற்றப்பட்டு இருக்க முடியாது.

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். பயங்கரவாதம் என்ற நோயின் வேர் அண்டை நாட்டில் பரவியிருக்கிறது. நாம் அந்த நோயை அதன் வேரில் இருந்து குணப்படுத்த வேண்டாமா?ஏன் அதன் வழிகாட்டிகள் இந்தியாவிலோ, அல்லது நாட்டுக்கு வெளியிலோ இருந்து இந்தியாவை அழிக்க நினைத்தால், நமது நாடு அமைதியாக உட்கார்ந்து இருக்காது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.