தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபடுகிறார்கள் – அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் குற்றச்சாட்டு…

ராமநாதபுரம்:-

ராமநாதபுரத்தில் தோல்வி பயத்தால் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் கூறினார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் எதிர்க்கட்சியினர் அடிக்கடி தாக்கதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 1-ந்தேதி பெரியபட்டினம் என்ற இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கண்ணாடி பாட்டில்களை வீசி வேட்பாளர் மற்றும் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், அன்வர் ராஜா எம்.பி. ஆகியோரை கொல்ல முயற்சி செய்தனர்.

இந்த தாக்குதலில் திருப்புள்ளானி ஒன்றிய கழக அவைத்தலைவர் உடையத்தேவன் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வேட்பாளரை கொல்ல முயன்ற சம்பவம் ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலக்குடியில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய தொண்டர்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் மற்றும் தி.மு.க.வினர் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த இஸ்லாமிய தொண்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். அரிவாளால் வெட்டியதில் கழகத் தொண்டர் பாய்ஸ் என்ற முகமது யாசின் படுகாயம் அடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று எதிர்க்கட்சியினரின் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் முகமது யாசினை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதன் பின்னர் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலக்குடியில் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரிக்கும் போது கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததோடு இஸ்லாமிய பெருமக்களும், பெண்களும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். வேட்பாளர் சென்ற பிறகு ஆரத்தி எடுத்த இஸ்லாமிய பெண்ணை தாக்கியும், அவரது சகோதரரான திருப்பாலக்குடி தேர்தல் பொறுப்பாளர் பாய்ஸ்(எ) முகமது காசின் என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

தோல்வி பயம் உறுதியாகிவிட்ட நிலையில் திமுகவினரும், எதிர்க்கட்சியினரும் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஒரு வன்முறை கட்சி இவர்களோடு கூட்டணி வைத்துள்ளவர்கள் ரவுடிகள். இவர்களுக்கு ஒரு போதும் நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் அமைதியாக இருக்கிறோம். மீண்டும் மீண்டும் எங்கள் கழக தொண்டர்களை தாக்குகின்றனர். எங்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. எங்களை மேலும் சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் கூறினார்.