சிறப்பு செய்திகள்

எதிர்க்கட்சியில் பிரதமராகும் தகுதி யாருக்கும் கிடையாது – துணை முதலமைச்சர் முழக்கம்…

தேனி:-

இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்த்வர் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் எதிர்க்கட்சியில் பிரதமராகும் தகுதி யாருக்கும் கிடையாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  தேனியில் பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:- 

புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாச தொண்டர்களே, நாட்டிலிலே நல்ல அரசு நடந்திட தீய சக்திகளை அழித்திட நாம் வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளோம். நாம் அமைத்துள்ள வெற்றிக் கூட்டணியை நாட்டுமக்களுக்கு அறிமுகம் செய்திட தீவிரவாத நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் பாரத பிரதமர் மோடியின் தலைமையில் நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.

இந்த எழுச்சிமிகு கூட்டத்தினை பார்த்து எதிர்க் கட்சிகளுக்கு அடிவயிறு கலங்கியிருக்கும், துரோகிகளுக்கு நடுக்கம் கண்டிருக்கும், சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளவர்களுக்கோ சப்த நாடிகளும் அடங்கியிருக்கும். பாரதம பிரதமர் அவர்களே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள், கழகத்தில் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அது தமிழ்நாட்டின் நலனுக்காகதான் இருக்கும் என்று அளவு கடந்த நம்பிக்கை உள்ளவர்கள். நம்மோடு கூட்டணி வைத்திருப்பவர்களுக்கு வெற்றிக்கனியினை தருபவர்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அதில் தி.மு.க அங்கம் வகித்தது. அதனால் அவர்களின் குடும்பம் மட்டும் நன்மை அடைந்தது. தமிழ்நாடு பலன் அடைந்ததா? தமிழர்கள் பலன் அடைந்தார்களா? இதற்கு பதில் கூற வழியில்லாமல் வாய்கூசாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இலங்கை தமிழ் மக்கள் அழிவதற்கு காரணமாக இருந்தார்கள், தி.மு.க. காங்கிரஸ் இணைந்திருக்கும் கூடா நட்புக் கூட்டணியை வேரோடு வீழ்த்தும்!
தி.மு.க அன்று காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு தற்போது கூட்டணி அமைத்துள்ளார்கள். இதை தமிழக மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் என்று கூறிவிட்டு, பிறகு கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க தலைவர் தெரிவிக்க துணிவில்லாமல், நாம் அமைத்துள்ள கூட்டணியினை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மையெல்லாம் தவிக்கவிட்டு, மறைந்தபோது நமது பாரத பிரதமர் மோடி ஜி நமக்கு ஆதரவாக இருந்தார்கள். அம்மா அவர்களின் மீதுள்ள அன்பின் காரணமாக, நட்பின் காரணமாக, அம்மா அவர்களின் ஆட்சியின் சிறப்பின் காரணமாக மத்திய அரசு துயரத்தில் பங்கு கொண்டது, தோள் கொடுத்தார்கள், உறுதுணையாக இருந்தார்கள்.

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அவர்களின் வழியில் வந்தவர்கள் நாம், நாங்கள் தவறு செய்யமாட்டோம், தவறு செய்பவர்களுடன் இருக்கமாட்டோம்.நம் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் நன்மை கிடைக்க வேண்டுமென்றால், பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களால் தான் முடியும். அதற்காகதான் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளோம்.
இதயம் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்முடன் இருந்து என்ன முடிவு எடுத்திருப்பாரோ அதைத்தான் அம்மாவின் விசுவாச தொண்டர்களாகிய நாங்களும் முடிவு எடுத்துள்ளோம்.இதயம் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திட்டத்திற்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி பொறுப்பு ஏற்றவுடன் அவர்களின் நட்பின் காரணமாக வழிதந்தார்கள். இருவரின் நட்பை நேரில் பார்த்தவர்கள் நாங்கள்.அந்த நட்பின் காரணமாகத்தான் இன்று நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம்.

இந்திய திருநாட்டின் நன்மைக்காக உறுதியான நடவடிக்கை எடுக்க நரேந்திர மோடிஜியால் மட்டும் தான் முடியும். இதை நாங்கள் சொல்லவில்லை. இந்த பாரத நாடே செல்கிறது.எதிர்க்கட்சி கூட்டணியை பார்த்துக் கேட்கிறேன். உங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்று கூற முடியுமா? முடியாது. உங்கள் கூட்டணியில் யாருக்கும் பிரதமராக வருவதற்கு தகுதி இல்லை. யார் பிரதமர் சென்று சொல்வதற்கு தைரியம் இல்லை.பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தால் மதசார்பு அணிக்கு ஆபத்து என்று அரசியல் பச்சோந்திகளின் தவறான பிரச்சாரம்.

கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மையின மக்களின் மீது, தாக்குதல் என்பதே இல்லை. சிறுபான்மையின மக்களின் உண்மை நண்பனாக திகழ்ந்தார் மோடிஜி அவர்கள் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.அதுபோல் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நேற்று, இன்று நாளை இருப்பதும் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.வருகின்ற தேர்தல், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். எனவே தர்மத்தினை காப்பாற்றுவதற்காக நமது வெற்றிக் கூட்டணிக்கு வாக்கு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.