சிறப்பு செய்திகள்

எதையும் தாங்கும் சக்தி எனக்கு இருக்கிறது – மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி…

தருமபுரி:-

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன், கடினமாக உழைத்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அதனால் எதையும் தாங்கும் சக்தி எனக்கு இருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி  மாலை தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேச்சேரி, மேட்டூர் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசை ஆதரித்து பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றகழகம். அந்த இருபெரும் தலைவர்களும் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை அடிப்படையாக கொண்டுதான் அம்மா அவர்களின் அரசும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கழக வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து இதுவரை 35 நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 210 சட்டமன்ற தொகுதிக்குச் சென்று பல்வேறு இடங்களில் பேசிவந்துள்ளேன். நான் பொதுமக்களை சந்திப்பதைத் தான் முழு நோக்கமாக கருதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். அப்போது எதற்காக கூட்டணி வைத்துள்ளோம், தமிழ்நாட்டு மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிர் காலத்தில் இனி செய்யப்போகும் திட்டங்கள் குறித்து விரிவாக பேசி வருகிறேன்.

ஆனால், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் என்னைப் பற்றியும், கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றியும் தரக்குறைவாக பேசி வருகிறார். தி.மு.க.வினர் இதுவரை தேர்தல் சமயத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியுள்ளனரா? தேர்தலுக்கு தேர்தல், அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, மக்களை குழப்பமடையச் செய்து வாக்குகளைப் பெறுவதே அவர்கள் வழக்கம். ஆனால், கழக அரசு அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது ஏழை, எளிய மக்களின் நலனுக்காக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்குவதாக பேசிவருகிறார். ஆண்டுக்கு ரூ.72,000 வழங்குவது என்பது சாத்தியமற்றது, அதற்கு அதிக நிதி தேவைப்படும். இவர்களால் எப்படி இதை நிறைவேற்ற முடியும். இப்படி நிறைவேற்ற முடியாத திட்டங்களை தேர்தல் நேரத்தில் மட்டும் அறிவிப்பார்களே தவிர, மக்களுக்காக எதையும் செய்யமாட்டார்கள். செயல்படுத்த முடியாத திட்டத்தை, செயல்படுத்துவது போல போலித் தோற்றத்தை உருவாக்கி, பொய்யான வாக்குறுதியை அளிப்பதே தி.மு.கவினர் வாடிக்கை. எனவே, வாக்காளர்களே இதுபோன்ற பொய்யான வாக்குறுதியை அளிக்கும் கட்சிகளுக்கு நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்களா என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட கருத்துக்களுடன் பேசிவருகிறார். கர்நாடகாவில் பேசும் போது கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என பேசுகிறார், இன்று தமிழ்நாட்டில் சேலம், கிருஷ்ணகிரியில் பேசும் போது விவசாயிகளின் நலன் குறித்து பேசுகிறார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் போது தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் பாதிக்கும் என்பது அவருக்கு தெரியாதா?

கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிக்கு காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது, காங்கிரஸ் கட்சிக்கு கம்யூனிஸ்டு கட்சி ஓட்டுக்கேட்கிறது. இப்படி கொள்கை அளவிலே ஒரு மித்த கருத்து இல்லாத இது போன்ற சந்தர்ப்பவாத கூட்டணியால் எப்படி ஒரு நிலையான ஆட்சியைத் தரமுடியும், மக்களுக்கான திட்டங்களை இவர்களால் எப்படி நிறைவேற்ற முடியும். கேராளாவிலும், கர்நாடகாவிலும் தமிழர்கள் நலனுக்கு எதிராக பேசிவரும் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது என்றால், தமிழ்நாடு பாலைவனமாக ஸ்டாலின் துணைபோகிகிறாரா?

தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் தி.மு.கவின் தலைவராக இருக்கிறார். தற்போது ஸ்டாலின் மகன் உதயநிதி வந்து விட்டார். உதயநிதி ஸ்டாலின் நான்கு படங்களில் நடத்திருக்கிறார். கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் அவ்வளவு தான். அதைத் தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது. உதயநிதிக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது. உதாரணமாக, மத்திய சென்னையில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் தயாநிதிமாறனை உதயநிதி அறிமுகம் செய்து வைத்து பேசுகிற அளவிற்கு ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், தற்போது தி.மு.க. பரிதாபமான நிலைக்குச் சென்று உள்ளது என்பதைத் தான் காட்டுகிறது.

அதுமட்டுமின்றி தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் ஒரு பெண் வேட்பாளரை அழகாக இருக்கிறார் எனச் சொல்லி வாக்குக் கேட்டுள்ளார். இது அவரது அறியாமையையும், முதிர்ச்சியின்மையையும் காட்டுகிறது. நான் 1989இல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக ஆனேன். ஸ்டாலினும் அப்போதுதான் சட்டமன்ற உறுப்பினரானார். நான் தொடந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு வருகிறேன். ஆனால் ஸ்டாலின் அவ்வாறு இல்லை. ஸ்டாலின் எதைப் பற்றி பேசினாலும் எனக்கு கவலையில்லை. ஏனென்றால், நான் கிராமத்தில் பிறந்து வளந்தவன்.

கடினமாக உழைத்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனக்கு அந்த சக்தி இருக்கிறது. நான் எதையும் தாங்கிக் கொள்வேன். ஆனால் ஸ்டாலினுக்கு அந்த சக்தி இருக்கிறது எனத் தெரியவில்லை. ஒரு கூட்டத்தில் பேசும் போது “எனக்கு ஒரு கட்டி, பாரதப் பிரதமருக்கு ஒரு கட்டி இருக்கிறது அதை அப்புறப்படுத்த வேண்டும்” என பேசியிருக்கிறார். இவர் ஆறுமாதத்திற்கு ஒரு முறை எதற்காக மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் லண்டன் சென்று வருகிறார். அதன் மர்மம் என்ன என்பது நாட்டுமக்களுக்கு ஸ்டாலின் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நான் அவரைப் பற்றி பேசத்தொடங்கினால் அவரால் தாக்குப்பிடிக்க முடியாது.

இப்பகுதி மக்கள், என்னுடைய மக்கள், எனது சொந்த மாவட்ட மக்கள். நமது மாவட்டத்திற்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது நமக்கெல்லாம் பெருமை. ஒரு முதலமைச்சரை பார்க்க வேண்டும் என்றால் முன் அனுமதி பெற்றுத்தான் சந்திக்க வேண்டும். ஆனால், நீங்கள் எந்த நேரமும் என்னை சந்தித்து கோரிக்கைகளை வைக்கலாம். இப்பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நங்கவள்ளி – மேச்சேரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்தவுடன் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

அதே போன்று தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி உபரி நீரை இப்பகுதியில் உள்ள கால்வாய், ஏரிகள், குளங்களில் நிரப்பிட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 45 சதவீத பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுற்றப்பிறகு, இத்திட்டம் செயல்படுத்தப்படும். இப்பகுதியில் தக்காளி அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

தக்காளியை பதப்படுத்தி சேகரித்து வைக்க காமனேரியில் ரூ.8.80 கோடியில் காய்கறி பதப்படுத்தும் கிடங்கு அமைக்கப்படவுள்ளது. பொட்டனேரியில் உள்ள ஆடு ஆராய்ச்சி நிலையத்தில் உரை விந்து நிலையம் அமைக்கப்படும். சேலம் கள்ளக்குறிச்சி அருகே 900 ஏக்கர் பரப்பளவில் கால்நடைப் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படவுள்ளது. இங்கு ரூ.100 கோடியில் தரமான மரபணுமிக்க நாட்டின காளைகள், ஆடுகள், உற்பத்தி செய்திட உறைவிந்து நிலையம் அமைக்கப்பட்டும்.

மேலும், ஆடுகளை மொத்தமாக விற்பனை செய்யவும், ஏற்றுமதி செய்யவும் ரூ.300 கோடி மதிப்பில் அதற்கான தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். மேச்சேரியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். ஓமலூர் – மேச்சேரி சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஓமலூர் – மேட்டூர் சாலையில் மூன்று இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். பவானி, மேட்டூர், மேச்சேரி, தொப்பூர் வரையிலான சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.142 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்றுள்ளது. இவ்வாறாக தொடர்ந்து வளர்ச்சித்திட்டப்பணிகள் நடைபெற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் டாக்டர். அன்புமணி ராமதாசுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.