சிறப்பு செய்திகள்

எத்தனை எதிர்ப்பு , விமர்சனங்கள் வந்தாலும் அம்மா அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து நீடிக்கும் – முதலமைச்சர் உறுதி…

புதுக்கோட்டை:-

எத்தனை எதிர்ப்பு வந்தாலும், விமர்சனங்கள் வந்தாலும் அம்மா அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து நீடிக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவனை ஆதரித்து கந்தர்வக்கோட்டை, திருவெறும்பூர், உய்யகொண்டான் மலை, திருச்சி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடைபெறுகின்ற மிக முக்கியமான தேர்தல். அண்டை நாடுகள் இந்திய நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல். தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை நாட்டிலே ஊடுருவச்செய்து நம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் இந்திய நாட்டிற்கு வலிமையான, திறமையான, உறுதியான பிரதமர் வேண்டும். அத்தகைய ஆற்றல் உள்ள பிரதமர் தான் நரேந்திரமோடி. அவர் மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகத்தான், நாம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறோம்.

இந்தக்கூட்டணி கொள்கை பிடிப்புள்ள கூட்டணி, மக்கள் நலன் சார்ந்த கூட்டணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அறிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றப்படும். கடந்த 22ஆம் தேதி முதல் இன்று வரை, தொடர்ந்து பல்வேறு தொகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களைச் சந்தித்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களுக்காக செயல்படுத்திய நலத்திட்டங்களை சொல்லி வாக்குக்கேட்டு வருகிறேன். செல்லுமிடம் எல்லாம் பொது மக்கள் அரசு செயல்படுத்திய திட்டங்களை வரவேற்கும் முகமாக பேராதரவை அளித்து வருகிறார்கள். இந்தக் கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, தாய்மார்கள் நலனில் தனிக்கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக தற்போது ரூ.18,000 வழங்கப்படுகிறது. அம்மா முழு உடல் பரிசோதனை மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத்திட்டம் அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம், ஆகிய திட்டங்கள் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீட்டுத்தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அம்மா தாய் சேய் நலப் பெட்டக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 மாத கர்ப்பகாலம் முடிந்தவுடன் ரூ.2000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம். 6 மாத காலம் முடிந்தவுடன் ரூ.2000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. அப்பெட்டகத்தில் கர்ப்பிணிகளுக்கு ஒரு கிலோ ஊட்டச்சத்து பவுடர். இரும்புச்சத்து டானிக், பேரிச்சம்பழம், நெய், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதன் மூலமாக பிரசவ காலங்களில் தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. பிறக்கின்ற குழந்தை நல்ல உடல் எடையுடன், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. தாய் சேய் நலனை பேணிக்காப்பதில் அம்மாவுடைய அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது.

தைப்பொங்கலை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் ரூ.1000 வழங்கக் கூடாது என தி.மு.க. கெட்ட எண்ணத்துடன் நீதிமன்றத்திற்கு சென்றது. இருப்பினும் நீதிமன்றம் ரூ.1000 வழங்க தடையில்லை என அறிவித்ததன் அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என நான் அறிவித்தேன்.

ஏழைத் தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற நிதியை தடுத்திடும் வகையில் தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து, தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுபான்மையின மக்களுக்கு என்றும் அரணாக இருப்பது கழக அரசு. சாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும் அரசு, அம்மாவுடைய அரசு. முத்தலாக் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது அதை எதிர்த்து குரல் கொடுத்தது அ.தி.மு.க. அதேபோன்று, கிறிஸ்துவ பெருமக்கள் ஜெருசலம் புனிதப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்ததும் அம்மாவுடைய அரசு. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் கடும் மின் வெட்டு இருந்தது. இதனால் விவசாயிகளும், தொழிலாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.

2011-ல் தேர்தல் நேரத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் இரண்டாண்டு காலத்திற்குள்ளாக மின்வெட்டு அறவே நீக்கப்படும் என அறிவித்தார்கள். அதனை செயல்படுத்தும் வகையில் மின்சாரத்துறையில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக மின் வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்கியதோடு, தற்போது மிகை மின் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

புதுக்கோட்டைக்கு மருத்துவ கல்லூரி தந்த அரசு அம்மாவுடைய அரசு. அதே போன்று கந்தர்வக்கோட்டையில் புதிய அரசு கலைக் கல்லூரி கொடுத்த அரசு அம்மாவுடைய அரசு. கந்தர்வக்கோட்டையில் புதிய தொழில் நுட்பக்கல்லூரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ரூ.340 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. காவிரி – கொல்லிடம் உபரி நீர் திட்டத்தையும் நிறைவேற்றித்தரப்படும். இன்னும் இது போன்ற வளர்ச்சித்திட்டப்பணிகள் பல இந்தப் பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தலில் ஏற்படும் தோல்வி பயத்தின் காரணமாக மிரண்டு போய், அரண்டு போய் என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசி வருகிறார். அரசு மூலம் செயல்படுத்தப்படும் எல்லா திட்டத்தையும் அவர் குறை சொல்லி வருகிறார். மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் போது அதை மக்களுக்கு சென்று சேராமல் தடுக்கும் முயற்சியிலும், தொடர்ந்து ஈடுபடுகிறார்.

இருந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட கழக அரசு மக்களுக்காக செய்யக்கூடிய அனைத்து நலத்திட்டங்களையும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், விமர்சனங்கள் வந்தாலும் நிச்சயம் நிறைவேற்றும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவனுக்கு முரசு சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.