சிறப்பு செய்திகள்

எத்தனை கட்சிகள் எதிர்த்து போட்டியிட்டாலும் தடைகளை உடைத்தெறிந்து வெற்றிவாகை சூடுவோம் துணை முதலமைச்சர் முழக்கம்…

திருப்பூர்:-

கழக ஒருங்கினணப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் திருப்பூர் மாவட்டம் மூலனூரில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு (எ) ஜி.மணிமாறனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், துணைசபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரச்சாரத்தின் போது கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு (எ) ஜி.மணிமாறன் இந்த நாடாளுமன்ற தொகுதியின் பல்வேறு தேவைகளை அறிந்து புரிந்து, பல்வேறு நலத்திட்டங்களையும், மத்திய-மாநில அரசின் மக்களுக்காக தொலை நோக்குத் திட்டங்களையும் கொண்டு வந்து சேர்ப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள நல்ல வேட்பாளர். தேர்தல் களத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் நல்லவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு மெகா வெற்றி கூட்டணியை அமைத்துள்ளோம். ஆனால், காங்கிரஸ், திமுக மற்றும் சில உதிரிகட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்துள்ளனர். காங்கிரஸ்- திமுக கூட்டணி ஏற்கனவே மத்தியில் ஆட்சி செய்த போது, திமுக சார்பில் 10 அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் மக்களுக்கான எவ்வித நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சியில் காவேரி நடுவர் மன்றம் தீர்ப்பு வெளியானது.

இதனை அரசிதழில் வெளியிட புரட்சித்தலைவி அம்மா தி.மு.க.விற்கு கோரிக்கை விடுத்தும் வெளியிடவில்லை. மீண்டும் அம்மா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, 2011-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் சென்று போராடி காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார் புரட்சித்தலைவி அம்மா. தற்போது காங்கிரஸ் திமுக கூட்டணியினர் மெதுவாக சந்திக்க வருகின்றனர். அவர்களிடம் மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

திமுக ஆட்சியில் வன்முறை கலாச்சாரம், நிலஅபகரிப்பு, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. மறைந்த முதல்வர் அம்மாவின் ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தினமும் கலர் கலராக உடையணிந்து மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்தார். நடந்தார், கரும்புத் தோட்டத்தில் புகுந்தார், டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். தமிழகத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவைத்து கொளுத்தி விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் என்ன தீப்பந்தம் கையில் ஏந்தி சுற்றி வருகிறோமா.

மாமன், மச்சான் சண்டையிலே, தினகரன் பத்திரிகை அலுவலகத்தை தீவைத்து கொளுத்தினார்கள். 3 உயிரிழப்புகள் ஏற்பட்டு, தற்போது நீதிமன்றம் தீர்ப்பில் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது. இதுதானே அவர்கள் வன்முறை கலாச்சாரம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்து வழங்க இருந்தோம். ஆனால் திமுகவினர் நீதிமன்றத்திற்கு சென்று அதற்கு தடை பெற்றார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மையினர் மக்களுக்கான கட்சியாக திகழ்வதால் தான் புனித யாத்திரை மெக்காவிற்கும் மற்றும் ஜெருசலேத்திற்கு செல்வதற்கும், நோன்பு கஞ்சி தயாரிப்பது போன்றவற்றிற்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி அனைத்து சமூகத்திற்கும் பாதுகாப்பு அரணாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அம்மாவின் ஆட்சியில் தான் ஒரு மனிதனுக்கு உண்ண உணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம் என்ற நிறைவான நல்ல ஆட்சியை அமைத்துத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை அதுவும் இலவச அரிசியை வழங்கும் திட்டத்தை அம்மா அறிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இன்றைக்கு வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இது அம்மாவின் ஆட்சி, இது, மக்களுக்கான ஆட்சி. அம்மா வழியில் இன்று சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதை தி.மு.க.வினரால் பொறுத்து கொள்ள முடியாமல் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

எத்தனை கட்சிகள் எதிர்த்து போட்டியிட்டாலும் அவர்களின் தடையை உடைத்தெறிந்து வெற்றி வாகை சூடுவோம். பிரியாணி, பரோட்டா சாப்பிட்டு பணம் கேட்ட கடைக்காரர்களை தி.மு.க.வினர் தாக்கினர். அம்மா வழியில் ஆட்சி நடத்தும் நாங்கள் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்திலேயே ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு ஜி.மணிமாறனை அதிகவாக்குகள் பெற்று வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.