தற்போதைய செய்திகள்

எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அம்மா ஆசியுடன் கழகம் வெற்றிபெறும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி…

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் சின்னப்பனுக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்குகேட்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது கழக அமைப்பு செயலாளர்கள் சி.த.செல்லப்பாண்டியன், சின்னத்துரை, பா.ஜ.க. ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

கழகத்தை எதிர்த்து விளாத்திக்குளம் தொகுதியில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சி சாதனையால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர் சின்னப்பன் மக்களின் பேராதரவோடு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

120 கோடி மக்களை எதிரி நாட்டு அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, சீனா, போன்ற நாடுகளே அசந்து போகும் வகையில் இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் வகையில் மத்தியில் சிறந்த நல்லாட்சி தந்து வரும் பிரதமர் நரேந்திரமோடியின் கரத்தை வலுப்படுத்தி நாடு நலம் பெற நம் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். விளாத்திக்குளம் தொகுதி வளர்ச்சிக்காக இரவு பகல் பாராது பாடுபட்டு வருபவர் சின்னப்பன். இவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தீவிர தொண்டராக இருந்து கழக பணியாற்றியவர். அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

புரட்சித்தலைவி அம்மா போட்ட பிச்சையால் எம்.எல்.ஏ ஆன அனிதா ராதாகிருஷ்ணன், சாத்தூர் ராமச்சந்திரன், என்.கே.பெருமாள், உமா மகேஸ்வரி ஆகியோர் கட்சிக்கும், அம்மாவுக்கும் துரோகம் செய்துவிட்டு நம் கழகத்துக்கு எதிரானவர்களுடன் போய் சேர்ந்து விட்டனர். ஆனால் என்றும் கழக பணியாற்றிய உண்மை தொண்டனான சின்னப்பனுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றிணைந்து விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளனர். ஆகவே விளாத்திக்குளம் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து சின்னப்பனை அமோக வெற்றிபெற வைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.