தற்போதைய செய்திகள்

எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

விருதுநகர்

எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா தலைமை வகித்தார். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிந்துமுருகன், மாவட்ட ஊராட்சித்தலைவர் வசந்திமான்ராஜ், மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி கருப்பசாமி, சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் முத்தழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பற்றி சிந்தித்து முதல்வர் எடப்பாடியார் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அம்மா விட்டுச்சென்ற பணிகளை முதல்வர் எடப்பாடியார் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். ஸ்டாலின் எத்தனை கனவு கண்டாலும், எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழக முதல்வராக வரவே வாய்ப்பு கிடையாது. அவருக்கு அந்த யோகமும் கிடையாது. எடப்பாடியார் இருக்கும்வரை அவர் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர். தமிழகத்தில் அதிமுகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக பல்வேறு போராட்டங்களையும், கலவரங்களையும் தூண்டி விட்டு வருகிறது. தற்போது முஸ்லிம்களை தூண்டிவிட்டு திமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் அப்பு மகன், மாமன், மச்சான் உறவுகளோடு முஸ்லிம்களோடு நாம் பழகி வருகிறோம். நமது உறவுகளை கெடுக்கும் வகையில் திமுகவினர் கலவரங்களை தூண்டி விடுகின்றனர். டெல்லியில் கெஜ்ரிவால், மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜி, தமிழகத்தில் ஸ்டாலின் போன்றவர்கள் கலவரங்களை தூண்டி விடுவதிலேயே குறியாக உள்ளனர். அதிலும் கலவரத்தை மத்திய அரசுதான் தூண்டி விடுகின்றது என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். ஆளும் கட்சியாக இருப்பவர்கள் எதற்கு கலவரத்தை தூண்ட வேண்டும். ஆளும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று அவர்க்ளுக்கு தெரியாதா. ஆட்சியில் இல்லாதவர்கள்தான் பதவியை பிடிக்க கலவரத்தை தூண்டி விடுகின்றனர்.

மதக்கலவரத்தை தூண்டிவிடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று ரஜினி கூறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உரிமையை கேட்க உரிமை உள்ளது. அதை விடுத்து கலவரம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தினால் ஒரு இஸ்லாமியர்கள் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் கூறுங்கள் நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று முதல்வர் எடப்பாடியார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூற முடியாமல் ஸ்டாலின் வெளியேறி சென்று விட்டார்.

சட்டசபையில் பேசாமல் வெளியே சென்று முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஸ்டாலின் பேட்டி கொடுக்கிறார். இப்படி ஒரு நாடக அரசியல் பண்ண மு.க.ஸ்டாலினுக்கு கேவலமாக இல்லையா. மதக்கலவரங்களை தூண்டிவிட்டு ஈனத்தனமான அரசியல் செய்ய வேண்டுமா. கலவரங்களை தூண்டி விட்டு ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலின் நினைப்பது வெட்கமில்லையா. இதற்காகத்தான் பேரறிஞர் அண்ணாவும், பெரியாரும், எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவும் கஷ்டப்பட்டார்களா. எந்த காலத்திலும் மதக்கலவரம், சாதி கலவரங்களை அதிமுக அரசு அனுமதிக்காது.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பேட்ரிக், சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியன், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, ராஜபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா சுந்தரபாண்டியன், பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை வத்திராயிருப்பு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்புராஜ் செய்திருந்தார்.