தற்போதைய செய்திகள்

எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி

திருநெல்வேலி:-

எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

நாங்குநேரி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவரும்பால்வளத்துறை அமைச்சர்கே.டி.ராஜேந்திரபாலாஜி களக்காடு ஒன்றியம் கருவேலங்குளத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக சாதனை குறித்து எதுவும் கூற வழியின்றி கழக அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டு கூற வேண்டும் என்பதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார். புரட்சித்தலைவி அம்மா உடல்நிலை சரியில்லாமல் ஹார்ட் அட்டாக் வந்ததால் மரணமடைந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். அம்மா மரணம் தொடர்பாக அரசியல் விமர்சனம் வந்தது அனைத்தும் உண்மைதான். அதனால்தான் அனைவரின் கோரிக்கையை ஏற்று தனி விசாரணை ஆணையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அமைத்துள்ளார். அந்த விசாரணை ஆனையம் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறது. இதில் எந்த மர்மமும் இல்லை. இதுகுறித்து இப்போது ஸ்டாலின் பேசுவது தர்மமும் கிடையாது.

புயல் வந்தாலும், வெள்ளம் வந்தாலும், வறட்சி ஏற்பட்டாலும் மக்களை காக்கும் அரசாக எடப்பாடியார் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கஜா புயல் வந்த போது ஒரு உயிர்கூட பலியாகாமல் முன்கூட்டியே தகவல்களை பெற்று தமிழக மக்களை பாதுகாத்த அரசு கழக அரசு என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். திமுக ஆட்சி காலத்தில் இப்படி ஒரு பணியை அவர்கள் செய்யவே இல்லை. 8ஆண்டுகளுக்கு மேலாக கழகம் ஆளும் கட்சியாக இருப்பதால் திமுகவை மக்கள் மறந்து விடுவார்கள் என்று எண்ணி கழக அரசு மீது தொடர்ந்து பொய்யான தகவல்களை ஸ்டாலின் கூறி வருகிறார்.

திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மின்வெட்டு, கட்டபஞ்சாயத்து, விலைவாசி உயர்வு தமிழக மக்கள் இன்றும் மறக்க மாட்டார்கள். ஸ்டாலின் நாடகத்தை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு பணத்தை கொடுத்து ஆளை கூப்பிட்டு வருகின்றனர். எடப்பாடியார் கூட்டத்திற்கு பொதுமக்கள் விரும்பி வருகின்றனர். இளைஞர்கள் அதிகமாக ஆதரவு உள்ளது. புதிய இளைஞர்களை வாக்காளர்களை திமுக ஏமாற்ற முடியாது.

திமுக எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் ஆளும் கட்சியாக வரமுடியாது. ஸ்டாலின் ஒருக்காலமும் தமிழக முதலமைச்சராக வரமுடியாது. கழகம் தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும். நெல்லை தொகுதியில் வெற்றிபெற்ற திமுக எம்பி இந்த தொகுதி பக்கமே வரவில்லை. 2முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் நாங்குநேரி தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

காங்கிரஸ் சார்பாக தற்போது நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் சென்னையை சேர்ந்தவர். அதனால் அவரும் இந்த தொகுதியை கண்டு கொள்ள மாட்டார். கழகம் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் நாங்குநேரி தொகுதி ரெட்டியார்பட்டியில் வசிக்கக்கூடியவர். தொகுதியில் மக்களை அடிக்கடி சந்தித்து பேசுவார். ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தான் ஏராளமான திட்டங்கள் நாங்குநேரி தொகுதிக்கு கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.