நாமக்கல்

எத்தனை நொண்டி குதிரைகள் சேர்ந்தாலும் பந்தயக் குதிரையை தோற்கடிக்க முடியாது – கவிஞர் முத்துலிங்கம் முழக்கம்

நாமக்கல்:-

எத்தனை நொண்டி குதிரைகள் சேர்ந்தாலும் பந்தயக் குதிரையை தோற்கடிக்க முடியாது என்று கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.

ஸ்டாலின் எத்தகைய சதி வலைகள் பின்னினாலும் எடப்பாடி ஆட்சிக்கு நேராது வீழ்ச்சி அதற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலே சாட்சி, அதுதான் தேசம் காணப்போகும் காட்சி என்று நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் குறிப்பிட்டார்.

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் காளிப்பனை ஆதரித்து கழகத்தின் நட்சத்திரப் பேச்சாளரும் திரைப்படப் பாடலாசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞரும், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் நாமக்கல்லில் சில பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் கவிஞர் முத்துலிங்கம் பேசியதாவது:-

மக்களால் நான், மக்களுகாக நான் என்று வாழ்ந்த ஒரே தலைவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான் அம்மா வழியிலே நாட்டுகாகவும், மக்களுகாகவும் எடப்பாடி கே. பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இன்று நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் தர்மத்தின் பக்கம் பாண்டவர்கள் நின்றதைப் போல அண்ணா தி.மு.க கூட்டணி நிற்கிறது. அதர்மத்தின் பக்கம் கௌரவர்கள் நின்றதைப் நின்றதைப் போல தி.மு.க கூட்டணி நிற்கிறது. இதில் யார் ஜெயிக்க வேண்டும் என்று கேட்டால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தர்மத்தின் பக்கம் நிற்கும் கூட்டணிதான் ஜெயிக்க வேண்டும் என்பார்கள்.

அண்ணா தி.மு.க இந்தத் தேர்தல் களத்தில் பந்தயக் குதிரையாகப் பயந்து கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணிக் குதிரைகள் எல்லாம் நொண்டிக் குதிரைகள். எத்தனை நொண்டிக் குதிரைகள் ஒன்று சேர்ந்தாலும் ஒரு பந்தயக் குதிரையைத் தோற்க்கடிக்க முடியாது. இந்த தேர்தலில் முழுக்க முழுக்க நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்.

தி.மு.க வுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் ஆட்சிக் காலத்திலே தான் முல்லைப் பெரியாறு, காவிரி,கச்சத்தீவு உரிமைகளை எல்லாம் பறி கொடுத்தோம் இலங்கைத் தமிழர்கள் வாழ்வுக்கு உலை வைத்தவர்களும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியினர்தான். இதைச் சிந்தித்துப் பார்க்கும் மக்கள் தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள்.

இந்தியாவில் ஊழலுக்காக முதன் முதல் ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது தி.மு.க ஆட்சிதான். ஆக ஊழல்வாதிகளை மீண்டும் மக்கள் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். இந்தத் தேர்தலுடன் ஸ்டாலின் கனவு நிர்மூலமாகப் போகிறது.தி.மு.க கொள்கைக் கும்பல் மட்டுமல்ல. கொலைகாரக் கும்பலாகவும் மாறிவிட்டது. சொந்தக் கட்சிகாரர்களையே வெட்டிச் சாய்த்தவர்கள் அவர்கள்.தி.மு.க ஆட்சிக் காலத்திலேதான் நில அபகரிப்பு ஏராளம் நடந்தது. கட்டபஞ்சாயத்து செய்து அடுத்தவர் சொத்தை அபகரித்தவர்களும் அவர்கள்தான். இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்களா?

தி.மு.கவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. அதை இந்தத் தேர்தல் உலகுக்கு உணர்த்தப் போகிறது. தி.மு.க ஓட்டைப் படகு. அது இனிக் கரை சேராது. அது உடைந்துபோன கப்பல், பயணத்திற்கு இனி உதவாது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடிதான் பிரதமராக வருவார். இந்தியா பலமுள்ள நாடாக இருக்கவேண்டுமென்றால் பாகிஸ்தான் போன்ற நாடுகள் நம்மைக் கண்டு பயம்கொள்ள வேண்டும் என்றால் மோடி போன்ற ஒரு துணிச்சலான பிரதமர்தான் இன்று நாட்டுக்குத் தேவை.

இந்திராகாந்திக்குப் பிறகு வந்த பிரதமர்களில் மோடியைப் போன்ற துணிவும் தெளிவும் எந்தப் பிரதமருக்கும் இருந்ததில்லை. 2014 ஆம் ஆண்டு முதலைச்சராக இருந்த அம்மா மோடியைச் சந்தித்து டில்லியில் இருப்பது போல் எல்லா வசதிகளும் உடைய எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்று தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரும் அமைக்கிறேன் என்றார்.

பிறகு 2015 ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதற்கேற்ப கடந்த ஜனவரி 27 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள தோப்பூரில் 1500 கோடியில் மருத்துவமனை அமைப்பதற்கு மோடி அடிக்கல் நாட்டிச் சென்றிருக்கிறார்.அம்மாவின் எண்ணத்தை ஈடேற்றி வைத்ததற்காக மோடிதான் பிரதமர் ஆக வேண்டும் என்பதே மக்களின் முடிவு.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் வைக்கப்படும் என்று மோடி அறிவித்தாரே. அதற்காக மோடி பிரதமராக வர வேண்டும். இந்த நேரத்தில் ஸ்டாலின் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் நீங்கள் என்னதான் முயன்றாலும் எடப்பாடி ஆட்சிக்கு நேராது வீழ்ச்சி. அதற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலே சாட்சி. அதுதான் தேசம் காணப்போகும் காட்சி. வெற்றி பெறப் போகின்ற வேட்பாளர் காளியப்பனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெறச் செய்யுமாறு வேண்டுகின்றோம்.

இவ்வாறு கவிஞர் முத்துலிங்கம் பேசினார். உடன் நட்சத்திர பேச்சாளர் வையாபுரி, கழகப் பேச்சாளர் விஜய்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.