கன்னியாகுமரி

எந்த தேர்தல் வந்தாலும் கழகமே வெற்றி பெறும் : தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் உறுதி…

கன்னியாகுமரி

எந்த தேர்தல் வந்தாலும் கழகமே வெற்றி பெறும் என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள்விழா, அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல அண்ணா தொழிற்சங்க கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணித் தோட்டம் பணிமனை தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது. கன்வீனர், எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் என். முருகேசன் வரவேற்புரையாற்றினார்.

அண்ணா தொழிற்சங்க பேரவை கல் வெட்டினை திறந்து வைத்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், கழக அமைப்பு செயலாளருமான என். தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மாவின் ஆசியோடு நடைபெற்று வரும் கழக ஆட்சியில் எத்தனையோ மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொரு மக்கள் நலத் திட்டமும் கொண்டு வரும் போது அது மக்களுக்கு பயன் பெறும் திட்டம் தானா? என்பதை ஆழ்ந்து சிந்தித்து நமது முதல்வரும், துணை முதல்வரும் கொண்டு வருகிறார்கள். அண்மையில் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் குடும்ப அட்டை ஒன்றிற்கு 1000 ரூபாய் அளித்தனர். அதற்கு மக்கள் மிகுந்த பாராட்டு தெரிவித்தனர். யாரெல்லாம் ஏளனமாக பேசினார்களோ அவர்கள் இன்று வாயடைத்து போய் நிற்கிறார்கள்.

அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை பேசி தீர்த்து கொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உடனே கழகத்திற்கு பணி செய்ய வாருங்கள். எந்த தேர்தலாக இருந்தாலும் அந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தான் வெற்றி பெறும். மேலும் இனி எப்போதும் ஆளும் கட்சியாக அ.இ.அ.தி.மு.க மட்டுமே இருக்கும். இது நாட்டு மக்களுக்கு மிகவும் நன்றாக தெரியும். எனவே கழக அரசின் சாதனைகளை நீங்கள் பொது மக்களிடம் எடுத்து சொல்லி கழகத்தின் வெற்றிக்கு என்றைக்கும் துணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.