இந்தியா மற்றவை

என்னை தடுத்தாலும் பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது – அமித் ஷா பதிலடி…

ஜாதவ்பூரில் அவரது கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜாய்நகர் தொகுதியில் கேனிங் என்ற இடத்தில் நடந்த மற்றொரு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அமித் ஷா பேசியதாவது:-

யாராவது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரித்தால் மம்தா பானர்ஜி கோபப்படுகிறார். இப்போது நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிடுகிறேன். அவருக்கு தைரியம் இருந்தால், என்னை கைது செய்யட்டும். நான் நாளை கொல்கத்தாவில்தான் இருப்பேன்.

மம்தா பானர்ஜி அரசு குழப்பத்தில் இருக்கிறது. என்னை கூட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுக்க வேண்டும் என்று மம்தா அரசு நினைப்பதாக தோன்றுகிறது. என்னை தடுக்கலாம். ஆனால், இந்த மாநிலத்தில் பா.ஜனதாவின் வெற்றியை அவரால் தடுக்க முடியாது.வங்காளதேசத்தில் இருந்து இங்கு ஊடுருவியவர்கள் கரையான் போன்றவர்கள். அவர்கள் நாட்டின் வளங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர்களை வெளியேற்றுவோம்.

ஆனால், மம்தா பானர்ஜியோ அவர்களை தனது ஓட்டு வங்கியாக கருதுகிறார். அந்த ஓட்டு வங்கியால் கூட அவரது தோல்வியை தடுக்க முடியாது. தங்க வங்காளத்தை ஏழை வங்காளமாக மாற்றி விட்டார், மம்தா. மேற்கு வங்காளத்தில் சிண்டிகேட் ராஜ்யத்தை மம்தா நடத்தி வருகிறார். அவருடைய மருமகன் அபிஷேக் பானர்ஜியின் நலனுக்காக திரிணாமுல் காங்கிரஸ் பணியாற்றி வருகிறது. முன்பு, சிண்டிகேட் வரி இருந்தது. தற்போது, மருமகன் வரியாக மாறிவிட்டது. இந்த அத்தை-மருமகன் ஊழல் அரசை நாம் தூக்கி எறிய வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.