தற்போதைய செய்திகள்

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் நவீன காப்பகம், அதிநவீன ஆய்வகம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்…

சென்னை:-

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் படைப்பு கலை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளை மகிழ்விப்பவர் திட்டம், மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளுக்கான நவீன காப்பகம், காற்றழுத்த குழாய் வழி அதிநவீன ஆய்வக சேவை மற்றும் அல்ட்ரா சோனாகிராம் அறை ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்காக காப்பகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் முதன் முதலாக அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் அரசு கண் மருத்துவமனை ஆகியவற்றில் பணிபுரிபவர்களின் குழந்தைகளை பணி நேரத்தில் கவனித்து கொள்ள நவீன குழந்தைகள் காப்பகம் Neurolac Paints பங்களிப்புடன் (எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்காப்பகம் வயதிற்கேற்ப 3 பிரிவுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் 1 வயது வரை பாதுகாப்பான தொட்டில் படுக்கை வசதி, மதர் அப்சொலியுட் அபக்–ஷன் (MAA) திட்டத்தின் அடிப்படை நோக்கமான பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவும் வகையில் சிறப்பு வசதி, 1 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு டேபிள் டென்னிஸ், கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளுக்கான நவீன விளையாட்டு மையம், படிப்பதற்கும், வீட்டுப்பாடங்கள் செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஹன்ரர்டு ஹேன்ட்ஸ் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் ஓவியக் கலைஞர்கள் குழந்தைகளை கவரக்கூடிய வகையில் ஓவியங்களை வரைந்துள்ளனர். இம்மையத்தில் வர்ணங்கள் காற்று மாசு இல்லாதவாறும், குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாதவாறும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக உலக தரத்தில் ரத்தம் உள்ளிட்ட பரிசோதனை மாதிரிகளை மனித தொடர்பே இல்லாமல் முழுமையாக தானியங்கி முறையில் NICU & அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அதிநவீன காற்றழுத்த குழாய்கள் மூலமாக ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் பரிசோதனை முடிவுகள் துரிதமாகவும் துல்லியமாகவும் பெறப்படுவதால் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க ஏதுவாக அமைகிறது.

மேலும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக நடனம், இசை, நாடகம் போன்றவை நடத்தப்படுகின்றது. புற்றநோய் சிகிச்சை மேற்கொள்ளும் குழந்தைகள் அதிக நேரத்தினை மருத்துவமனையில் செலவழிப்பதனால் அவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை நடத்தப்படும்.

தி லிட்டில் தியேட்டர்அமைப்பு சென்னையில் “மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளை மகிழ்விப்பவர்” எனும் புதிய முயற்சியை செய்து வருகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு எண்டோஸ்கோப்பி சிகிச்சையின் போது உதவுதல், ஸ்கேன் பரிசோதனையின்போது குழந்தையினை சாந்தப்படுத்துதல் போன்றவற்றில் பயன்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு. எட்வின்ஜோ, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ஜெயந்தி, அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் மரு. அரசர் சீராளர், நேரோலேக் பெயிண்ட் லிமிட்டடின் இயக்குநர் (நிதி) திரு. பிரசாந் பாய் மற்றும் நிர்வாகிகள், தன்னர்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.