தமிழகம்

ஏப்ரல் 12-ம் தேதிக்குள் பள்ளி தேர்வுகள் நிறைவு கல்வித்துறை உத்தரவு…

சென்னை:-

தமிழகத்தில் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரையில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அன்றைய தினமே நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018-19-ம் கல்வியாண்டில் பள்ளி செயல்படும் கடைசி நாள் ஏப்ரல் 12 என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.