தற்போதைய செய்திகள்

ஏழை, எளிய மக்களின் வாழ்வு சிறக்க முன்னோடி திட்டங்கள் நிறைவேற்றம் : அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்…

திருவண்ணாமலை:-

ஏழை, எளிய மக்களின் வாழ்வு சிறக்க முன்னோடி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதத்துடன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், எஸ்.வி.நகரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, செய்யாறு சுகாதார மாவட்டம் சார்பாக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நடைபெற்ற சுகாதாரத் திருவிழா மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்து கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி, தாய்மார்களுக்கு 16 பொருட்கள் அடங்கிய ‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்’, யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை பெட்டகம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இல்லாமை இல்லாத நிலை, தமிழகத்தில் உருவாகிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செயல்பட்டு வருகிறார்கள். ஒரு நாட்டின் மனித வளர்ச்சி குறியீட்டு அளவினை நிர்ணயிப்பதிலும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டுகோலாக திகழ்வதிலும் மக்களின் உடல்நலன் முக்கிய பங்கு வகிக்கிறது. அம்மாவின் வழியில் தரமான மருத்துவ சேவையை அனைத்து மக்களும், குறிப்பாக ஏழை எளிய மக்கள் பெற்றிட வேண்டும் என்ற அடிப்படையில், அம்மாவின் அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

புதிய சுகாதார நிலையங்கள் ஏற்படுத்துதல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட, வட்ட மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், நவீன மருத்துவ கருவிகள் வழங்குதல், நகரும் மருத்துவமனை திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் வழங்கும் திட்டம், பெண்கள் சுகாதாரத் திட்டம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா ஆரோக்கியத் திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், அம்மா முழு உடல் பரிசோதனை மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம், பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள், தாய்ப்பால் வங்கி, சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டம், உயரிய மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகளில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 36,279 பயனாளிகளுக்கு ரூ.60 கோடியே 3 லட்சம் செலவில் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டு 15,411 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.4.90 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறந்த 10,933 குழந்தைகளுக்கு தலா ரூ.1000 மதிப்புடைய 16 பொருட்கள் அடங்கிய “அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்” வழங்கப்பட்டுள்ளது. “அம்மா மருந்தகம்” மூலம் நுகர்வோருக்கு நியாயமான விலையில் 15 சதவிகிதம் வரை தள்ளுபடியுடன் கூடிய தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படும் திட்டத்தின் கீழ், ரூ.70.42 லட்சம் மதிப்பிலான மருந்துகள் கூட்டுறவு மருந்தகம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் செலவில் மாவட்ட முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு 25 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் புரட்சித் தலைவி அம்மாவின் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை அவர்கள் (ஆரணி), ஆர்.வனரோஜா (திருவண்ணாமலை), செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மைதிலி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் (செய்யாறு) மரு.வி.கோவிந்தன், எஸ்.வி.நகரம் வட்டார மருத்துவ அலுவலர் டி.லின்சி, அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மொத்தம் 1680 நபர்கள் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், 722 நபர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை, 59 நபர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், 11 நபர்களுக்கு ஈ.சி.ஜி. பரிசோதனை, 14 நபர்களுக்கு எக்ஸ்ரே, 55 நபர்களுக்கு அம்மா ஆரோக்கிய திட்டத்தின் கீழ் முழு உடல் பரிசோதனை, 22 நபர்களுக்கு பல் மருத்துவ சிகிச்சை, 36 நபர்களுக்கு கண் பரிசோதனை, 189 நபர்களுக்கு ரத்த பரிசோதனை, 210 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை, 36 நபர்களுக்கு தடுப்பூசி, ஆகிய பரிசோதனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.