சிறப்பு செய்திகள்

ஏழை, எளிய மக்கள் வாழ்வு வளம்பெற மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் – கழக தேர்தல் அறிக்கையில் மகிழ்ச்சி பொங்கும் அறிவிப்பு…

வறுமையை ஒழிப்பதில் வள்ளல் மனத்தாயின் புரட்சிகர திட்டங்களில் ஒன்றாக ஏழை, எளிய மக்கள் வாழ்வு வளம்பெற மாதந்தோறும் ரூ.1500 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என கழக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும்  தலைமைக் கழகத்தில் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு புரட்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், காவேரி- கோதாவரி ஆற்றை இணைக்க வேண்டும், காவேரி டெல்டா பகுதி டெல்டா மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கும் படித்த இளைஞர்களும், மீனவர்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இத்திட்டங்களை மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றுவோம் என்றும் கழகத் தேர்தல் அறிக்கையில் முன்நிறுத்தப்பட்டுள்ளன.

கழக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம் – மாதாந்திர நேரடி உதவித் தொகை ரூபாய் 1,500 வழங்கும் திட்டம் 

இந்தியாவில் வறுமையை ஒழித்து மக்களுக்கு வளமான வாழ்க்கையைத் தர வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும் எண்ணற்றோர் இன்னமும் துயர்மிகு வறுமைச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஓரளவுக்கு மட்டுமே மக்களைச் சென்றடைந்துள்ளன என்பதையே அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழுகின்ற மக்கள், கைவிடப்பட்ட பெண்கள், வருமானமற்ற விதவைப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் உடலுழைப்புத் தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர் ஆகியோர் சந்திக்கும் வறுமையின் துயரங்களை நீக்க வேண்டுமாயின், சில உறுதியானதும், துணிச்சலானதுமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது காலத்தின் கட்டாயம். இனியும் பொறுப்பதற்கில்லை வறுமையின் கோரத்தை.

“பிறப்பால் யாருக்கெல்லாம் குறைவாகக் கொடுக்கப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் சட்டத்தால் நிறைவாக வழங்கப்பட வேண்டும்’’ என்று பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மக்சசே கூறினார். இதையே தனது வாழ்நாள் முழுவதும் செய்துகாட்டி வாழ்ந்தார் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

அண்மையில், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூபாய் 1,000-மும், பின்னர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற மக்களுக்கு, குடும்பம் ஒன்றிற்கு ரூபாய் 2,000-மும் வழங்கியது கழக அரசு. கழக அரசு மேற்கொண்ட இக்கருணைமிகு சிறப்புத் திட்டங்களால் பயனாளிகளுக்கு ஏற்பட்ட நற்பயன்களைப் பார்க்கையில், இது போன்று பயனாளிகளுக்கு நேரடியாக உதவித் தொகைகளை ரொக்கமாக வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நற்பயன்கள் பல நிகழ்வது உறுதி என்று மனநிறைவுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழுகின்ற மக்கள், கைவிடப்பட்ட பெண்கள், வருமானமற்ற விதவைப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் உடலுழைப்புத் தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர் ஆகியோருக்கு மாதந்தோறும் ரொக்கமாக ஒரு தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எளிதாக நடக்கக்கூடிய ஒரு திட்டமாக இருக்க முடியும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. நம் சகோதர, சகோதரிகளின் துயர்களைக் களைந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வை அமைத்துத் தர வேண்டும் என்று அயராது உழைத்த புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் கனவுகளை நனவாக்கும் திட்டமாக இது அமைந்திடும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தபோது, அதை எள்ளிநகையாடியோரும், பயனற்றத் திட்டம் என்று மனசாட்சியின்றி விமர்சித்தோரும் வாயடைத்துப் போகும் அளவுக்கு சத்துணவுத் திட்டம் இன்று இந்திய நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதையும், ஐ.நா. சபையும், உச்சநீதிமன்றமும் பாராட்டும் வண்ணம் தமிழகத்தில் சிறப்புற நடைபெறுவதையும் பார்க்கிறோம். அதைப் போலவே இப்பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழியும் அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டமான, மாதாந்திர நேரடி உதவித் தொகை ரூபாய் 1,500 வழங்கும் திட்டம் மகத்தான வெற்றிபெறும்.

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் புதிய ஜிஎஸ்டி வரி வருவாய் மூலமும், நேரடி மற்றும் மறைமுக வரிகளை முறையாகவும், திறம்படவும் வசூலிப்பதன் மூலம் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது. எனவே, இந்தத் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்.

இளைஞர்கள், இளம்பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியும், அவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகளை தேடித் தரும் முயற்சியும், எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம் இந்திய பொருளாதாரம் பல்வேறு முறைகளில் தொடர் வளர்ச்சியைக் கண்டுவரும் இவ்வேளையில், இந்திய இளம்பெண்களும், இளைஞர்களும் மாறிவரும் சமூக, பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப திறன்களைப் பெறவும், தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பும், வசதியும் ஏற்படுத்தித் தருவது மிகவும் இன்றியமையாதது.

புதிய, மாறுபட்ட கோணங்களில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள TESDA – டெஸ்டா என்ற அரசாங்க நிறுவனம் அந்த நாட்டின் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் உலகெங்கும் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வண்ணம் வழங்கி வரும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மாதிரியாகக் கொண்டு நம் நாட்டிலும் புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்கி, இந்திய இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் திறன் மேம்பாடு அளிக்கவும், அத்தகைய பயிற்சிகளைப் பெற்றோர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு பெறுவதை எளிதாக்கிடவும் புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில் உருவாக்கப்பட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசை வலியுறுத்தும்.

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் நம் நாட்டுக்கு ஏராளமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றனர். வெளிநாடுகளில் வேலை தேடிக்கொள்ளும் வாய்ப்பினை நம் இளம் தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். வெளிநாடுகளில் நம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற எத்தகைய பயிற்சியும், திறன் மேம்பாடும் தேவைப்படுகிறது என்பதைக் கண்டறியவும், அந்த வேலை வாய்ப்புகளை நம் இளைய சமுதாயத்தினர் பெற்றிடவும், வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்லும் இளைஞர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளித்திடவும், பயணத்திற்குத் தேவையான உதவிகளை செய்திடவும், இடைத் தரகர்களிடம் ஏமாறாத வண்ணம் அவர்களைப் பாதுகாத்திடவும் புதிய அமைப்பு ஒன்றினை ஏற்படுத்த, மத்திய அரசை வலியுறுத்தி, இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்துத் தந்திடும்.

இன்றளவும் இளைஞர்கள் நெஞ்சில் தன்னம்பிக்கையையும், உழைப்பின் உயர்வையும் எடுத்துச் சொல்லும், எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்த நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரில் இப்புதிய எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்புகள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசு உதவியுடன் அமல்படுத்தும்.