தற்போதைய செய்திகள்

ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கழக அரசில் சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்…

தருமபுரி:-

ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கழக அரசில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதத்துடன் கூறினார்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, மொரப்பூர், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 1359 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.4.47 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவிகளை வழங்கி பேசியதாவது:-

தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியான 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பதை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து தடையில்லாத மின்சாரத்தை அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி ரூ.2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்து 866 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பும் ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க கடந்த ஆண்டு தமிழக அரசு ரூ.8000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. இந்த தொகை தற்போது ரூ.10 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28 ஆயிரத்து 757 கோடியே 62 லட்சம் அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கி அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தியும், அவர்களுக்கான சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தியும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் நவீன செயற்கை கால்களும், 40 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 200 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும், 15 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 925 மதிப்பில் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபர்களுக்கு 8 கிராம் தங்க நாணயத்தினையும் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.