தற்போதைய செய்திகள்

ஒடிசா நோக்கி நகருகிறது பானி, புயல் கரையை கடக்கும் போது 205 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

சென்னை

வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. இது கரையை கடக்கும் போது 205 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பானி நேற்று அதிகாலை அதி தீவிர புயலாக வலுப்பெற்று தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னையிலிருந்து சுமார் 570 கி.மீ.தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று வடமேற்கு திசையில் இன்று மாலை வரை நகர்ந்து அதன் பின்னர் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்கரை நோக்கி செல்லக்கூடும்.

புயல் கரையை கடகும் போது 205 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இதனால் மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் தென்மேற்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம். தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மே 2-ந்தேதி வரை கொந்தளிப்பாக காணப்படும்.

வடதமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெயிலின் தாக்கம் புயல் கடந்த பிறகு தான் தெரிய வரும். மே 3ம் தேதி ஒடிசா கடற்கரையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக்கடலில் ஏப்ரல் மாதங்களிலும் புயல் உருவாகும் வாய்ப்பும் உண்டு. இரண்டு சீசன் உண்டு. இனி கோடை மழை குறித்து முன்கூட்டியே சொல்ல முடியாது. வங்கக்கடல் காற்றழுத்த நிலை ,உள் மாவட்டங்களில் உள்ள காற்றின் நிலையைப் பொறுத்தே அதுபற்றி கணித்து கூற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.