கோவை

ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு பெற்ற கழக கூட்டணி அமோக வெற்றி பெறும் – பி.ஆர்.ஜி.அருண்குமார் பேச்சு…

கோவை:-

2014 தேர்தலில் ஏற்பட்ட நிலைமை இப்போதும் தி.மு.க.வுக்கு உருவாகும் என்று மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ பேசினார்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி கழக கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், நந்தகுமார், சிங்காநல்லூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கே.ஆர்.ஜெயராமன், பகுதி செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன், வனிதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ பேசியதாவது:-

தி.மு.க ஆட்சி. குடும்ப ஆட்சி. கழக ஆட்சி மக்களுக்கான ஆட்சி. இந்தியாவே தமிழகத்தை உற்றுநோக்குகிறது. ஏனென்றால் புரட்சித்தலைவி அம்மா மறைவிற்குப் பிறகு நடைபெறுகின்ற இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் துணையோடு மகத்தான வெற்றியை பெற வேண்டும். இந்தக் கூட்டணி வெற்றிபெறுவதற்கு புரட்சித்தலைவி அம்மாவின் திட்டங்களான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குதல், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, மகப்பேறு நிதியுதவி திட்டங்களால் பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவினையும் இந்த கூட்டணி பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் 37 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ரூ. 6 கோடி நிதியுதவி வழங்கிய அரசு அம்மாவின் அரசு. சிறுபான்மை இன மக்களின் பாதுகாவலனாக அம்மாவுடைய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. கழகம் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாளாக உயர்த்தப்படும். என தெரிவிக்கப்பட்டது அதை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதே நிலை தான் இந்த தேர்தலிலும் ஏற்படும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் கழக அரசைப் பார்த்து ஊழல் அரசு என்று சொல்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி திமுக ஆட்சி என்பதை மறந்துவிட்டு தற்போது அவர் பேசி வருகிறார். கழக ஆட்சியை குறை கூறுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். மத்தியில் வலிமையான ஆட்சி இருந்தால் தான் பலமான தமிழகம் இருக்க முடியும் என்பதற்காகத் தான் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம்

கழக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்றையாவது ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்று பயன் அடைந்து இருப்பார்கள். ஆகவே நிலையான வலிமையான ஆட்சி அமைய நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் என்ற பெருமையை நாம் பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பேசினார்.

இக்கூட்டத்தில் வி.சி.ஆறுகுட்டி எம்எல்ஏ பேசுகையில், அம்மா அவர்களின் அரசு மூலம் தொகுதியில் மக்கள் திட்டங்கள் 100 சதவீதம் நிறைவு செய்துள்ளோம். தேர்தல் அறிக்கை அது அறிக்கையில் கூறியதை முழுமையாக உள்ளாட்சித்துறை அமைச்சர் அண்ணன் எஸ்.பி.வேலுமணி நமது தொகுதிக்கு எது கேட்டாலும் செய்து வருகிறார். மக்கள் திட்டங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். எது மக்களுக்குத் தேவை என்பதை நன்கு அறிந்து செயல்படும் அரசு கழக அரசு. எனவே நாம் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டால் போதும் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கழக கூட்டணி வேட்பாளர் சி.பி.இராதாகிருஷ்ணன் வெற்றிபெறுவார் என்றார்.