தற்போதைய செய்திகள்

ஒரு நபர் குடும்ப அட்டைக்கு பொருட்கள் நிறுத்தப்படவில்லை : அமைச்சர் ஆர்.காமராஜ் திட்டவட்டம்…

சென்னை:-

ஒரு நபர் குடும்ப அட்டைக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படவில்லை என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசுகையில், ஒரு நபர் கார்டுகள் வைத்திருக்கும் அதிக அளவிலான நபர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதில்லை. அதை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கன்னியாகுமரியில் ஒருநபர் குடும்ப அட்டைக்கு பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று உறுப்பினர் கூறியிருக்கிறார். இது சரியான தகவல் இல்லை. ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் சலுகைகளையும், பொருட்களையும் பெறும் நோக்கத்தில் தனியாக கார்டுகளை பெற்றுள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டதில் 33 ஆயிரம் ஒருநபர் குடும்ப அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவற்றிற்கு பொருட்கள் நிறுத்தப்படவில்லை. இதுபற்றிய புகார்கள் கொடுத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.