தற்போதைய செய்திகள்

ஒரே நேரத்தில் 3 படகில் சவாரி செய்கிறது – தி.மு.க. அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு…

சென்னை:-

ஒரே நேரத்தில் 3 படகில் தி.மு.க. சவாரி செய்கிறது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது அ.இ.அ.தி.மு.க. அலை வீசுகிறது. மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், ப.சிதம்பரத்தால் கழகத்தை ஒன்றும் செய்ய முடியாது. கழகத்தை இன்று தினகரன் குறைகூறி பேசுகிறார். அம்மாவின் உண்மை தொண்டர்கள் அமமுகவை ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியை தி.மு.க. எப்படி விமர்சனம் செய்தது என்று நினைத்து பார்க்க வேண்டும். உண்மையில் காங்கிரஸ் கட்சியினர் இதனை நினைத்துப் பார்த்தார்கள் என்றால் இப்படிப்பட்ட படுபாதகர்களோடு இருப்பதற்கு வெட்கி தலை குனிய வேண்டும். அந்த அளவுக்கு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். பின்னர் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று சொன்னார்கள். அதன்பிறகு கூடா நட்பு கேடாய் முடியும் என்றார்கள்.

மதவாத கட்சி, மதத்தை சார்ந்து இருக்கும் கட்சி என்று பா.ஜ.க.வை கடுமையாக திமுக விமர்சனம் செய்கிறது. ஒரு காலத்திலும் அவர்களோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்றார்கள். பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்து பல்வேறு துறைகளை பெற்று வளம் அடைந்தார்கள். இதுபோன்று தான் அவர்களுடைய பழைய வரலாறு உள்ளது. திமுகவுக்கு அரசியல் கொள்கை கிடையாது. அவர்களை பொறுத்தவரை ஒரே லட்சியம் பணம், பதவி. அதற்காகத்தான் இன்று பலருடன் பேசி வருகிறார்கள்.

ஒரு படகில் தான் சவாரி செய்து பார்த்திருக்கிறோம். ஆனால் மூன்று படகில் சவாரி செய்பவரை பார்க்க முடியுமா? அந்த திறமை உண்மையிலேயே ஸ்டாலினுக்குதான் உள்ளது. வேறு யாருக்கும் கிடையாது. காங்கிரஸ், பா.ஜ.க., சந்திரசேகர் ராவ் என மூன்று படகுகளில் திமுக சவாரி செய்கிறது. சந்திப்பு என்பது ஒரு மணி நேரமா நடக்கும். சிந்தித்து பார்க்க வேண்டும்.

சந்திரசேகர ராவ் பேசியது குறித்து ஸ்டாலின் ஏதாவது தெரிவித்தாரா? அல்லது நான் குறிப்பிட்டதற்கு மறுப்பு தெரிவித்தாரா? இல்லை. எனவே மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருமா என்ற சந்தேகம் அவர்கள் (திமுக) மனதில் உள்ளது.

எங்களை பொறுத்தவரை மத்தியில் பாஜக ஆட்சி அமையும். தமிழகத்தில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். அம்மா அரசை பொறுத்தவரை வீதியில் நின்று குரைத்தாலும் அரசை தொட்டு பார்க்க முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக அலைதான் வீசுகிறது .நாங்கள் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.