சேலம்

ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி…

சேலம்:-

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பேனாக்கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேட்டூர் தொழிலாளர் இல்லம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தானம் – அகல்யா தம்பதியர். இவர்களுடைய ஒரே மகளான காயத்ரி, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஒரே மகள் இப்படி செய்து விட்டாளே என்ற கோபத்தில், அவருடைய தந்தை காயத்ரியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தாய் அகல்யா சமாதானம் ஆகி விட்ட போதிலும், கணவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தவித்த அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை நெத்திமேடு பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு தனியார் பேருந்தில் சென்ற அகல்யா, தமது மகள் வசிக்கும் குள்ளமுடையானூர் பெயர் பலகையை பார்த்துள்ளார். அப்போது கையில் வைத்திருந்த பேனாக்கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்தம் பீறிடவே பயணிகள் அலறினர்.

உடனடியாக அவர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து கருமலைக் கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.