தற்போதைய செய்திகள்

ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் 4 தொகுதி இடைத்தேர்தல்: மனுதாக்கல் தொடங்கியது…

சென்னை:-

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவை தொகுதி தவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கும் மக்கள் வாக்களித்தனர்.

இதேபோல், மே 19-ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.இதற்கிடையே, அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. சூலூர் தொகுதியில் மட்டும் சுயேட்சையாக ஒருவர் மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 29-ம் தேதியாகும்.மனுக்கள் மீதான பரிசீலனை 30-ம் தேதி நடக்கிறது. மே மாதம் 2-ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலை 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதி இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.