தற்போதைய செய்திகள்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கழகத்திற்கே எங்கள் ஆதரவு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாக்காளர்கள் உறுதி…

தூத்துக்குடி:-

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் மோகனுக்கே தங்கள் முழுமையான ஆதரவு என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாறைக்குட்டம், மேலப்பாண்டியபுரம், சவரிமங்கலம், ஐம்புலிங்காபுரம், புதியம்புத்தூர், சாமிநத்தம், தெற்குவீரபாண்டியாபுரம், சில்லாநத்தம், புதூர்பாண்டியபுரம், கீழஅரசடி, ஓணமாக்குளம், மலைப்பட்டி, இளவேலங்கால், தென்னம்பட்டி ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரடியாகச் சந்தித்து தொகுதி நிலவரங்களைக் கேட்டறிந்தார்.

அப்போது அவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ” அம்மாவின் வழியில் தமிழகத்தில் நல்லாட்சியை நடத்தி வருகின்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான நல்லாட்சியில் தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தங்குதடையின்றிக் கிடைப்பதாக தெரிவித்தனர்.

குறிப்பாக தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கிய ஆயிரம் ரூபாய் என்பது வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள தங்களுக்கு மிகுந்த பயனை அளித்ததாக நன்றி தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்துக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என அம்மா அவர்கள் வழங்கிய வாக்குறுதியை எவ்வளவோ பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றி வருவதால் தங்களில் பலர் மின்சாரக் கட்டணமே செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக உவகையுடன் தெரிவித்தனர்.

இந்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள பெண்கள் தங்கள் பணி நிமித்தமாக தூத்துக்குடி நகருக்குச் செல்ல முன்னர் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வந்ததாகவும், தற்போது தமிழக அரசு வழங்கி வரும் மானிய விலையிலான இருசக்கர வாகனங்கள் அவர்களுக்கு பேருதவியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இப்பகுதி பொதுமக்களின் வாழ்க்கைக்கு சவாலாக விளங்கி சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் அ.தி.மு.க அரசு மட்டுமே உறுதியாகச் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் நிறுவனம் குறுக்கு வழியில் எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிட முயற்சிகளை மேற்கொண்ட போதெல்லாம் உறுதியான சட்டப்போராட்டத்தை நடத்தி தங்களைப் பாதுகாத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையிலான அரசுக்கே தங்கள் முழுமையான ஆதரவு என்றும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.”

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி “ முதற்கட்டமாக நாங்கள் ஆய்வு மேற்கொண்ட 14 கிராமங்களில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகள் அடங்கியுள்ள பகுதிகளில் அ.தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மிகவும் வலுவான கட்டமைப்புடன் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை கழக அரசின் சாதனைகள் பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நடத்தி வரும் சட்டப்போராட்டம் இந்தப் பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் மோகனின் வெற்றி உறுதியாகி உள்ளது.” என்றார்.

அப்போது அமைச்சருடன் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டங்களில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளரும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளருமான எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், கழக கலை இலக்கிய அணியின் துணைச்செயலாளர் திரைப்படத்தயாரிப்பாளர் கே.சி.பிரபாத், சிவகாசி ஒன்றியக் கழக செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.