தற்போதைய செய்திகள்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க.வுக்கு தோல்வி உறுதி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முழக்கம்…

தூத்துக்குடி:-

ஓட்டப்பிடாரம் தொகுதி புரட்சித்தலைவி அம்மாவின் கோட்டை. இத்தொகுதியில் தி.மு.க. தோல்வி அடைவது உறுதி என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் பி.மோகனை ஆதரித்து வர்த்தகரெட்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சார கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கூடுதல் தேர்தல் பொறுப்பாளர் பி.ஏ.ஆறுமுக நயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

ஓட்டப்பிடாரம் தொகுதி வீரத்திற்கும், தியாகத்திற்கும் வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துகோன், வீரன் சுந்தரலிங்கனார், வீரன் வெள்ளையத்தேவர், மகாகவி பாரதியார், அமுதகவி உமறுபுலவர் போன்ற தியாக சீலர்கள் பிறந்த புண்ணிய பூமியாகும். இங்கு துரோகிகளுக்கு இடமில்லை. இந்த தொகுதியில் புரட்சிதலைவி அம்மா அவர்களால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட சுந்தர்ராஜ் அம்மா ஆட்சியை கலைக்க நினைத்த துரோகியிடம் பெட்டியை வாங்கிக் கொண்டு பெட்டி சின்னத்தில் நிற்கிறார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி புரட்சித்தலைவி அம்மாவின் இரும்புக்கோட்டையாகும். திமுக மற்றும் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எத்தனை தில்லு முல்லு வேலைகள் செய்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து கழக வேட்பாளர் பெ.மோகன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரனும், திமுகவும் படுதோல்வியை சந்திப்பது உறுதி. இந்த தொகுதி மக்கள் கழக வேட்பாளர் ெப.மோகனுக்கு தரப்போகும் வெற்றி புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சிக்கு சூட்டப்போகும் மணி மகுடமாகும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் நெல்லை ஆவின் சேர்மன் சின்னத்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, நெல்லை ஆவின் பால் இயக்குனர் நீலகண்டன், தாய்கோ வங்கி மாநில துணைத்தலைவர் குற்றாலம் சேகர், தூத்துக்குடி கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சி.த.சு.ஞானராஜ், நியூட்டன், பாலமுருகன் தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் பி.ஜெகதீஸ்வரன், சகாயராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.