தற்போதைய செய்திகள்

ஓட்டுக்காக மக்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சாடல்…

திண்டுக்கல்:-

ஆட்சியில் இல்லாதபோது விவசாய கடனை ரத்து செய்வோம் என ஓட்டுக்காக மக்களை மு.க. ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பாமக வேட்பாளர் ஜோதி முத்து அறிமுக கூட்டம் மற்றும் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நத்தம் ஒன்றிய கழக செயலாளர் ஷாஜஹான் தலைமை வகித்தார். சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ராமராசு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கழக செயலாளர் மருதராஜ், கழக அமைப்பு செயலாளர் இரா.விஸ்வநாதன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

நடைபெறவுள்ள தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கின்ற போராகும். கழகத்துடன் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இப்படை தோற்கின் எப்படை வெல்லும். 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கழக கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். கடந்த முறை திண்டுக்கல் தொகுதியில் கழகம் தனித்து போட்டியிட்டு உதயகுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போது கூட்டணி கட்சிகளின் பலத்துடன் பாமக வேட்பாளர் ஜோதி முத்து 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாய கடன், பள்ளி கல்விக் கடன் ரத்து செய்வோம் என்கிறார். தமிழக மக்களை ஓட்டுக்காக ஏமாற்றி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். ஸ்டாலின் மகன் உதயநிதியை வைத்துத்தான் ஓட்டு வாங்கக் கூடிய சூழ்நிலை அக்கட்சிக்கு உள்ளது.

மத்திய அரசோடு மாநில அரசு இணக்கமாக செயல்பட்டதால்தான் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நான்கு வழி சாலை உள்ளிட்ட பல திட்டங்கள் நமக்கு கிடைத்துள்ளது. லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெற்று வருகிறது. புரட்சித்தலைவி அம்மா சொல்வதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். அதேபோல் அம்மாவின் அரசும் சிறப்பான திட்டங்களை அறிவித்து சொன்னதையும், சொல்லாத திட்டங்களையும் செய்து வருகிறது. நத்தம் தொகுதியில் மட்டும் கழக கூட்டணி வேட்பாளருக்கு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் இது உறுதி.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன் பேசியதாவது:-

கடந்த முறை கழகம் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது மெகா கூட்டணியை அமைத்து உள்ளோம். இது மெகா கூட்டணி மட்டுமல்ல மகா கூட்டணி,வெற்றிக் கூட்டணி. எனவே அம்மா நினைத்தது போல் 40 தொகுதிகள் வெற்றி பெற்றாக வேண்டும். அதுவே நமது அம்மாவிற்கு செய்யக்கூடிய நன்றிக்கடனாகும். அம்மா வரவிற்கு பின்னர் கழக ஆட்சி நெல்லிக்காய் மூட்டை சிதறியது போல் சிதறும் என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் பேசினர். ஆனால் அம்மாவின் கனவு போல கழகமும் ஆட்சியும் 100 ஆண்டு காலம் சிறப்பாக திகழும்.

அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள். மக்களுக்கு செய்த நன்மைகளை வாக்குகளாக மாற்ற கழக நிர்வாகிகள் பாடுபட வேண்டும். தொடர்ந்து மோடி பிரதமராக இருக்க, கழக நல்லாட்சி தொடர கழக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தர வேண்டும். 40 தொகுதிகளிலும் திண்டுக்கல் தொகுதியில் தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன் பேசினார்.

நிறைவாக பேரூர் கழக செயலாளர் சிவலிங்கம் நன்றி கூறினார். கூட்டத்தில் ஆவின் சேர்மன் ஏ.டி.செல்லச்சாமி, பேரவை செயலாளர் வீ.டி. ராஜன், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.