தற்போதைய செய்திகள்

ஓட்டுக்காக ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு…

மதுரை

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அறிவித்து ஓட்டுக்காக ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வாக்கு சேகரித்தார்.

பின்னர் கோச்சடை அருகே தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. நிச்சயம் மக்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்று மத்திய அரசிடம் மதுரைக்கு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தருவார்.

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் முதலமைச்சரை பற்றி ஊடகங்களில் விமர்சித்துள்ளார். இவர் மத்திய அமைச்சராக இருந்த போது வாட் வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.5000 கோடி வரி வருவாய் கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாது ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்த போது இவர் நினைத்திருந்தால் காளைகளை காட்சி பட்டியலிலிருந்து நீக்கி இருக்க முடியும். அதையும் அவர் செய்யவில்லை. அது மட்டுமல்லாது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் பெற்றுத் தரவில்லை. தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் ஏதாவது ப.சிதம்பரம் உருவாக்கினாரா?

ஆனால் நாங்கள் இன்றைக்கு மதுரையில் எயம்ஸ் மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம். தமிழகத்தில் 11 நகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டிக்கு அனுமதி பெற்று தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாது ரூ.70,000 கோடி அளவில் சாலை விரிவாக்க பணிக்காக முதலமைச்சர் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். அது நிச்சயம் தமிழகத்திற்கு கிடைக்கும்.

மேலும் ரூ.40,000 கோடி அளவில் மத்திய அரசின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றன. மதுரை மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.1054 கோடி மதிப்பில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளன. மேலும் மதுரை விமான நிலையம் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இது போன்று ஏதாவது ஒரு திட்டத்தை ப.சிதம்பரம் தமிழக மக்களுக்காக செய்துள்ளாரா? அவர் ஓர் கையாலாகாத நிதி அமைச்சராகத்தான் இருந்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் 5 பவுனுக்கு கீழ் நகைகளை கடன் வைத்திருந்தால் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார். கூட்டுறவு வங்கிகளின் மூலம் 5 பவுனுக்கு கீழ் நகைக்கடன் வைத்திருப்போர் கடன் தொகை ரூ.25000 கோடி ஆகும். தனியார் வங்கிகளும் சேர்த்து ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடி ஆகும். நமது நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ரூ.2 லட்சம் கோடி. இதில் ரூ.1 லட்சம் கோடியை எப்படி இவரால் தள்ளுபடி செய்ய முடியும். ஆக ஸ்டாலின் ஓட்டுக்காக மக்களை ஏமாற்றுகிறார்.

அதே போல் ரூ.7000 கோடி அளவில் தி.மு.க. ஆட்சியில் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் ரத்து செய்யப்பட்ட தொகையோ ரூ.5560 கோடி தான். இதில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது ரூ.3712 கோடி. மீதியெல்லாம் மிட்டாமிராசுகள் வாங்கிய லாரி, டிராக்டர்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வாங்கிய கடன்தொகையாகும். இது எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ரூ.3712 கோடி தள்ளுபடி தொகையில் ரூ.506 கோடி ரூபாயை கொடுக்காமல் சென்று விட்டனர். அதை அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்தார்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஸ்டாலினும், சிதம்பரமும், தமிழகத்திற்கு என்ன நன்மை செய்தார்கள். ஆனால் அம்மா அவர்கள் மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் காட்டினார்கள்.

கறந்த பால் மடி புகுந்தாலும் புகலாம். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வரவே முடியாது. வலிமையான தேசத்தையும், வளமான தமிழகத்தையும் உருவாக்கும் வண்ணம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கழக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.