தற்போதைய செய்திகள்

கச்சத்தீவை விரைவில் மீட்போம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

திருநெல்வேலி

தமிழகத்தில் 40 ஆயிரம் குளங்களுக்கு மேல் தூர் வாரி சாதனை படைத்துள்ள முதலமைச்சர் கச்சத்தீவை விரைவில் மீட்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி அளித்தார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று பாளையங்கோட்டை ஒன்றியம் கே.டி.சி.நகர் ஆசிரியர் காலனி, வசந்தம் நகர், இ.பி.காலனி ஆகிய பகுதிகளில் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 40 ஆயிரம் குளங்களுக்கு மேல் தூர்வாரி இந்தியாவில் யாருமே செய்யாத சாதனையை படைத்துள்ளார். நாங்கள் இந்த பகுதியில் 15 நாட்களுக்கு மேல் பிரச்சாரம் செய்தோம். மக்களோடு மக்களாக இணைந்து மக்களின் குறைகளை கேட்டு அவர்களிடம் அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி விடுபட்ட பணிகளை செய்து தருவதாகவும் உறுதி தந்துள்ளேன். மக்கள் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

சீன அதிபரும், இந்திய பிரதமரும் மாமல்லபுரத்தில் மரத்தின் அடியின் கீழ் அமர்ந்து டீ அருந்தி பேசக்கூடிய பாதுகாப்பான தன்மை கொண்டது தமிழகம். அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்தது என்றால் அது திமுக ஆட்சியில் தான். திமுக ஆட்சியில் மின்தடையினால் மக்கள் கடும் அவதிப்பட்டார்கள்.

முடியாது என்பதை முடித்துக் காட்டுவது புரட்சித்தலைவி அம்மா அவர்கள். திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த மின்தடையை நீக்கி மின்மிகை மாநிலமாக ஆக்கியது புரட்சிதலைவி அம்மா. தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் ஏற்படுகின்ற உரிமை பிரச்சினைகளான முல்லை பெரியாறு, காவேரி நீர் பிரச்சினைகளில் நிதிமன்றம் மூலம் உரிமை நிலைநாட்டியதும் அம்மாவின் அரசு. கச்சத்தீவை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விரைவில் மீட்டெடுப்பார்.

மக்களின் மறதியை மூலதனமாக்கி புத்தர் போல் பிரச்சாரம் செய்கிறது காங்கிரசும், திமுகவும். ஊழலின் ஊற்றுக்கண் திமுக. மக்களின் இதயத்தை பெற்றது அம்மாவின் அரசு. ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களை திசை திருப்பவே ஸ்டாலின் திண்ணை பிச்சாரத்தை மேற்கொண்டார். கருணாநிதி வாரிசு ஸ்டாலின், ஸ்டாலின் வாரிசு உதயநிதி இவர்கள் காலில் விழுந்தால்தான் அங்கே பதவியில் இருக்க முடியும். அங்கு மன்னராட்சி போல் ஒரு குடும்ப ஆட்சி நடக்கிறது.

திண்ணை பிரச்சாரத்தில் பெறுகின்ற மனுக்களுக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற ஸ்டாலின் என்ன தீர்வு கண்டார் எனத் தெரியவில்லை. திமுகவினரிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை வாங்கி குப்பையில் போடுகிறார்கள். இவர்கள் மக்களிடம் வாங்கிய மனுக்களாக இருந்தால் ஒரு மனு கூட அரசின் துறைகளுக்கு வரவில்லை. தமிழக முதல்வர் வருகை எங்களுக்கு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும், வலிமையையும் தந்துள்ளது. நமது வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. கழகத்தின் 48-வது ஆண்டு தொடக்க விழா பரிசாக திமுக காங்கிரசிடம் உள்ள விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் வெற்றிக்கனியை மக்கள் பரிசளிப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், திருநெல்வேலி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்டு, அவைத்தலைவர் கணபதி சுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவசி, பாண்டியம்மாள், மதுரை மாவட்ட நிர்வாகிகள் பஞ்சவர்ணம், பஞ்சம்மாள், ஐயப்பன் மற்றும் ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.