தற்போதைய செய்திகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட சாலைகள், பாலங்களை சீரமைக்க ரூ.159 கோடி – தமிழக அரசுக்கு நபார்டு வங்கி அனுமதி…

சென்னை:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட சாலைகள், பாலங்களை சீரமைக்க ரூ.159 கோடி நிதி உதவி அளிக்க நபார்டு வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு கஜா புயலின் காரணமாக தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைப்பதற்காக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு), தமிழக அரசுக்கு ரூ.159 கோடி நிதி உதவி அளிக்க அனுமதி வழங்கி உள்ளது.

இதன் மூலமாக இந்த மாவட்டங்களின் கிராமப்புறங்களில் உள்ள 147 சாலைகளும், 115 பாலங்களும் சீரமைக்கப்படும். இந்த பணிகளை, 2021 மார்ச் 31-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக, சுமார் 701 கிராமங்கள், தங்கள் அருகில் அமைந்துள்ள 247 விற்பனை கூடங்களுக்கு வசதியாக தங்கள் விவசாய விளை பொருட்களை எடுத்து செல்ல முடியும்.

நபார்டின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து (ஆர்.ஐ.டி.எப்.) தமிழ்நாட்டுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களும், நபார்டு வங்கியிடமிருந்து உதவி பெற்று, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இப்படி, நபார்டு வங்கியிடமிருந்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக உதவி பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலம் ஆகும் என்பதும், ஏற்கனவே, நபார்டு உதவி பெற்று தமிழ்நாட்டில் ஏராளமாக ஊரக உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.