தற்போதைய செய்திகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.54 கோடியில் மரம் வளர்ப்பு திட்டம் – சட்டப்பேரவையில், அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்…

சென்னை:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.54 கோடியில் மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ப.கார்த்திகேயன்: வேலூர் தொகுதி, சத்துவாச்சேரி, பெருமுகை மற்றும் சலவன்பேட்டை ஆகிய மலைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நட அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன்:வேலூர் சட்டமன்றத் தொகுதிக்குள் அடங்கிய சத்துவாச்சேரி, பெருமுகை மற்றும் சலவன்பேட்டை ஆகிய மலைப் பகுதிகளில் கோட்டமலை மற்றும் பாலமதி காப்புக்காடுகள் உள்ளன. இந்த மலைப்பகுதிகளில் மண்வளத்திற்கேற்ப மாபெரும் மரம் வளர்ப்புத் திட்டத்தின்கீழ் ஆல், அரசு, மகோகனி, வேங்கை போன்ற 30,000 பல்வகை மரக்கன்றுகள் நடப்படும்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களின் மூலம் மரம் வளர்ப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் 2011-க்கு முன்னர் 21.76 சதவிகிதமாக இருந்த பசுமைப் போர்வை 2017-ல் 23.57 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 1.81 சதவிகிதமாக உயர்ந்து அகில இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் திகழவும் அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ப.கார்த்திகேயன்: வேலூர் என்றால் வெயிலூர் என்று எல்லோருக்கும் தெரியும். போன ஆண்டுகூட 108 டிகிரி, 110 டிகிரி வேலூரிலே வெயில் இருந்தது. அதனால்தான், மலைப்பகுதியிலே பெருமுகை பகுதியிலும், சத்துவாச்சேரி பகுதியிலும் நம்முடைய காகிதப்பட்டறை பகுதி, சைதாப்பேட்டை பகுதி, ஓல்டு டவுண் பகுதி, சலவன்பேட்டை பகுதிகளில் எல்லாம் செடி நட்டு மரமாக வந்தால் வெயிலூர், நிழலூராக மாறும் என்கிற காரணத்தால் தான் இந்தச் சட்டமன்றத்திலே வனத்துறை அமைச்சரைக் கேட்டு அமைகின்றேன்.

அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன்: நான் முதலில் சொன்ன பதிலிலே அது அடங்கியிருக்கிறது. இருந்தாலும் என்னுடைய குறிப்பைப் பார்த்து, மேலும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்த்து ஆவன செய்யப்படும். தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிக்கவும், பொதுமக்கள் மற்றும் இளம் தலைமுறையினரான மாணவ-மாணவியரிடம் மரம் வளம் வளர்ப்பு குறித்ததான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வன உயிரினங்கள் வாழ்வதற்கான சுற்றுச்சூழல் சமநிலையினை பராமரிப்பு மற்றும் உறுதி செய்யவும், வனக் கொள்கையின்படி நாட்டின் மொத்தப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கினை வனப்பரப்பாகவும், பல்வேறு மரம் வளர்ப்புத் திட்டங்கள் அம்மா அவர்களால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு, இப்போதும் அது தொடர்ந்து நடைபெறுகிறது. அதன்படி, ஒவ்வொரு வருடமும் அம்மா பிறந்த நாளில் மாபெரும் மரம் நடவுத் திட்டம் மாசிவ் ட்ரி பிளாண்டேசன் எனும் புரட்சிக்கரமான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று வரை மிகச் சிறப்பான முறையிலே நடைபெற்று வருகிறது.

உறுப்பினர் வேலூரிலே நடப்பட்ட மரங்கள், மற்றவற்றைப் பற்றி சொன்னார். அது வேலூரில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் மரம் வளர்கின்ற திட்டத்தின்மூலமாக சிறப்பான பணியினை நம்முடைய முதலமைச்சர் ஆலோசனையின் பேரில், வனத்துறை அருமையாக திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. வேலூர் மட்டுமல்ல, அனைத்துப் பகுதிகளுக்கும் அவற்றை திறம்பட நடத்துவதற்கு நல்ல சூழ்நிலை உருவாகியிருக்கிறது. 2011-2012 முதல் 2016-2017 வரை ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் மரக் கன்றுகள் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்படி எடுக்கப்பட்ட மரம் வளர்ப்பு நடவடிக்கைகளால் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் 21.76 ஆக இருந்த பசுமைப் போர்வை 2017-ல் 23.57 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே, இதை நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். இருந்தாலும், இப்போது ஊரக வளர்ச்சி முகமையின் மூலமாக மரம் வளர்த்தல், வனத் துறையின் மூலமாக மரம் வளர்த்தல் அத்தனையும் செய்துகொண்டிருக்கிறோம். தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின், மூலமாக 2016-2017 ஆம் ஆண்டில் 1,800 ஹெக்டேர் பரப்பளவில் மரக் கன்றுகள் நடவுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நம்முடைய ரைசிங் பபுல் பிளாண்டேசன் ஸ்கீம் என்ற பகுதியில் 2016 வரை, 42,40,687 கருவேல மரங்கள் நடப்பட்டுள்ளன.

அங்கு மட்டுல்ல, தமிழ்நாடு முழுவதும் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிறைய மரம் வளர்கின்ற தன்மையின் அடிப்படையில் தேக்குமரம் உற்பத்தி திட்டம், சந்தன மரம் வளர்த்தல் திட்டம், செம்மரம் வளர்த்தல் திட்டம், இலவச மரக் கன்றுகள் வழங்குதல் திட்டம் போன்ற பல திட்டங்கள் மூலமாக மரங்கள் நடும் பணி செய்யப்படுகிறது என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

தினசரி கதாநாயகன் சின்னத்தம்பி யானை. அது இன்றைக்கு எங்கே போகிறது, எங்கே வருகிறது என்பதை டி.வி.களிலெல்லாம் சொல்கிறார்கள். அதில் ஒன்றும் ரகசியமே இல்லை. அதுகுறித்து, நமக்கு இன்றைக்கு உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவிருக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற சின்னத்தம்பி என்கிற யானையைப் பிடித்து, காட்டுக்குள் விடுவதுதான் கடைசியான நிலை.

எந்த மிருகத்தையும் துன்புறுத்த வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு இல்லை. மக்களுக்குப் பொருந்தாத மிருகங்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை. அடுத்து, பன்றிகளைக் குறித்து கேட்டார்கள். பன்றிப் பிரச்சினை குறித்து எங்கெங்கு அதிகம் என்று சொல்கிறார்களோ, அவற்றை வனத்துறையின் மூலமாக சுட்டுப் பிடிப்பதற்குரிய உத்தரவை ஏற்கெனவே இங்கே அறிவித்திருக்கிறோம். அதன்படி இதுவரையில் கேட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சுடுகின்ற வேலைகள் எங்களுக்கு வாய்க்கவில்லை. அப்படி அப்படி வந்தால் தகவலை சபைக்குத் தெரிவிக்கிறோம்.

முதலமைச்சர் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப் பணித் துறையின் அமைச்சராகவும் இருக்கின்ற காரணத்தினாலே, மிகத் தெளிவாக மரம் வளர்க்கின்ற பிரச்சினையை, இன்றைக்கு நெடுஞ்சாலைத் துறையில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்களை நட்டு, லாரிகள் மூலமாக ரெகுலராக ஆக தண்ணீர் ஊற்றுகின்ற நிகழ்வு பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. மரம் வளர்க்கின்ற பணிகளை, அதை நடத்துகின்ற நேஷனல் ஹைவேஸ் அதாரிட்டி செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அதைக் கட்டாயம் செய்ய வேண்டுமென்ற உத்தரவை வனத்துறைக்கு முதலமைச்சர் வெளியிட்டு அதன்படி நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்லியிருக்கிற மற்ற பகுதிகளிலும் மரங்கள் வளர்க்கின்ற சூழ்நிலைகள் உள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் ரூ.54 கோடி மதிப்பீட்டில் பனை மரம், சவுக்கு, தேக்கு மற்றும் அலையாத்தி காடுகள் (மாங்ரோவ்) ஆகிய மரங்கள் நடவும், புயலினால் பாதிக்கப்பட்டு விழாத அளவுக்கு நல்ல மரங்களை நடுவதற்கான உத்தரவை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். அதன்படி 21.76 சதவிகிதமாக இருந்த பசுமைப் போர்வை 23.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறதென்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பதில் அளித்தார்.