தற்போதைய செய்திகள்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.1,700 கோடி ஒதுக்கீடு…

சென்னை

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பட்ஜெட் உரையில் அவர் மேலும் கூறியதாவது:-

பேரிடர் மேலாண்மை

மக்களுக்கு உரிய முன் எச்சரிக்கைகளை வழங்கி, கஜா புயலுக்குப் பின்னரான நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை இந்த அரசு திறம்பட கையாண்டுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு 786 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பைத் தணிப்பதற்கான தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து மத்திய அரசு 900.31 கோடி ரூபாயை விடுவித்தது.

இந்த நிதி ஆதாரங்களுடன் மாநிலத்தின் சொந்த நிதியையும் ஒருங்கிணைத்து, பயிர் சேதங்களுக்காக 774.13 கோடி ரூபாயும், உதவி நிவாரணத்திற்காக 577.46 கோடி ரூபாயும், வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக 401.50 கோடி ரூபாயும், மீனவர்களின் சேதமடைந்த படகுகளுக்காக 41.63 கோடி ரூபாய் உட்பட, ஆக மொத்தம் உடனடி நிவாரணப் பணிகளுக்காக 2,361.41 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. குடிசைகள், தென்னை மரங்கள் மற்றும் மீனவர்களின் எப்.ஆர்.பி. படகுகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்தின் வரையறையைவிடக் கூடுதலாக இந்த அரசு கணிசமாக உயர்த்தி வழங்கியுள்ளது.

மேலும், தற்போது நிலவிவரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடையின்றி குடிநீர் வழங்க இதுவரை 157 கோடி ரூபாய் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்காக 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டுதல், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிர் செய்தல் போன்ற நிரந்தர நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தனியே ஒரு திட்ட அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்காக, இதுவரை 230.09 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஏற்கெனவே அறிவித்தபடி, கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு 1.70 இலட்சம் ரூபாய் அலகுத் தொகை வீதம், 1,700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டச் செலவில், 720 கோடி ரூபாயை மத்திய அரசு தனது பங்காக ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன். மீதமுள்ள 980 கோடி ரூபாயை மாநில அரசின் பங்குத் தொகையாக தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலம் கடன் பெற்று இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில், எதிர்காலத்தில் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான, நீண்டகாலத் திட்டப் பணிகளை மேற்கொள்வது அவசியமாகும். ஒரு சிறப்பு முயற்சியாக, நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்காகவும், வெள்ளத் தடுப்பிற்காகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஒரத்தூர் கிராமத்திற்கு அருகே அடையாறு ஆற்றின் உப நதியான ஒரத்தூர் நதியின் குறுக்கே உப வடிநிலங்களுக்கு இடையே நீர் பரிமாறும் கால்வாயுடன் கூடிய நீர்த்தேக்கம் அமைத்தல்,

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்றின் ஆற்றுப் படுகையை மறுசீரமைத்தல் மற்றும் அருவாள்முக்கு நீட்சியிலிருந்து வெள்ள நீரினைத் திருப்புவதற்கான புதிய கால்வாயை அமைத்தல்; சிதம்பரம் வட்டத்திலுள்ள பேரம்பட்டிற்கு அருகில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ளத் தடுப்பு நீரொழுங்கியை அமைத்தல்; சிதம்பரம் வட்டத்தில் கடல்நீர் உட்புகுவதைத் தடுப்பதற்காக, பிச்சாவரம் கிராமத்தின் அருகில் உப்பனாறு ஆற்றின் குறுக்கே கடைமடை நீரொழுங்கியை அமைத்தல் மற்றும் 10 இதர பணிகள் உட்பட நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை 284.70 கோடி ரூபாய் மொத்தச் செலவில் இந்த அரசு வரும் நிதியாண்டில் மேற்கொள்ளும்.