தற்போதைய செய்திகள்

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.339.86 கோடி லாபம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

விருதுநகர்

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் திறக்கப்பட்ட 24 கூட்டுறவு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் மூலம் தமிழகத்திற்கு ரூ.339.86 கோடி லாபம் கிடைத்துள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

விருதுநகர் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் அருகில் கூட்டுறவுத்துறையின் மூலம் விருதுநகர் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கண்ணன் முன்னிலையில், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து இவ்விழாவில் 227 பயனாளிகளுக்கு ரூ.242.30 லட்சம் மதிப்பிலான முதலீட்டுக் கடனுதவிகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ.32.80 லட்சம் மதிப்பிலான சிறு, குறு நடுத்தர கடனுதவிகளையும், 1 பயனாளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பணிபுரியும் மகளிர் கடனுதவியையும், 1461 பயனாளிகளுக்கு 430.85 லட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழுக் கடனுதவிகளையும், 2 பயனாளிகளுக்கு 20 லட்சம் மதிப்பிலான வீட்டு அடமானக் கடனுதவிகளையும், 4 பயனாளிகளுக்கு 51 லட்சம் மதிப்பிலான வீட்டு வசதிக்கடனுதவிகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான தனிநபர் சம்பளக் கடனுதவிகளையும், 17 பயனாளிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பிலான முத்ரா கடனுதவிகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.9.50 லட்சம் மதிப்பிலான கொதுவைக் கடனுதவிகளையும், 28 பயனாளிகளுக்கு ரூ.114.43 லட்சம் மதிப்பிலான பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க கடனுதவிகளையும் என மொத்தம் 1753 பயனாளிகளுக்கு ரூ.9 கோடி 21 லட்சம் 38 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

இவ்விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கிராமப்புற பொது மக்களும் பயன்பெறும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள், கடனுதவிகள் உட்பட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக விவசாயக்கடன், பயிர்க்கடன், நகைக்கடன், பொது விநியோகத்திட்டம், மருந்தக விற்பனை உட்பட பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு கூட்டுவு விற்பனை இணையத்தின் மூலமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விருதுநகர் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை விருதுநகரில் துவக்கி வைத்துள்ளோம்.

தற்போது திறந்து வைத்த இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை சேர்த்து, இதுவரை தமிழ்நாடு முழுவதும் 41 கூட்டுறவு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 33 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசால் திறக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த 33 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 24 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் திறக்கப்பட்ட 24 கூட்டுறவு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் மூலம் தமிழகத்திற்கு ரூ.339.86 கோடி லாபம் கிடைத்துள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மக்களால் சங்கம் அமைக்கப்பட்டு நிர்வாகம் செய்வதுதான் கூட்டுறவுத்துறை. முதன்முதலில் லண்டனில் தான் 1884ம் ஆண்டு கூட்டுறவுச் சங்கம் துவங்கப்பட்டது. பின்னர், இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகத்தில் 1904ம் ஆண்டு முதல் முறையாக கூட்டுறவுச்சங்கம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் ரூ.1.94 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லா அரிசிகள் வழங்கப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன் 4,441 ஆக இருந்த நியாய விலைக்கடைகளை கிராம மக்களும் பயன்பெறும் வகையில் 15,501 நியாய விலைக்கடைகளாக உயர்த்தியவர். ஏழை, எளிய மக்களை நேசிக்கக்கூடிய மனிதாபிமானமிக்க தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மேலும், நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்று வரும் தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்கள் கணினி மையமாக்கப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையால் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் லாபகரமாக இயங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தகைய சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கு நாம் அனைவரும் என்றென்றும் ஆதரவு தர வேண்டும். மேலும், கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களில் குடியிருந்து வரும் பொதுமக்கள் அனைவரும் பொது விநியோகத்தின் கீழ் எளிதாக பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.