தற்போதைய செய்திகள்

கடலூரில் 2944 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் – அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்…

கடலூர்

கடலூரில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் 2944 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.9,30,75,000 மதிப்பிலான திருமண நிதியுதவியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர் டவுன்ஹாலில் சமூகநலத்துறை சார்பில் நடைபெற்ற ஏழை பெண்களின் திருமணத்திற்கு முதலமைச்சரின் தாலிக்குதங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கடலூர் மாவட்டஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2944 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.9,30,75,000 மதிப்பிலான நிதியுதவியை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது;-

அம்மா அவர்களின் திட்டங்களில் உன்னதமான திட்டம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமாகும். பெண்களின் கல்வி கற்கும் நிலையை ஊக்குவித்து அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திருமண நிதி உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, தற்போது, 23.05.2016 முதல் சமூகநலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் 5 திருமண நிதி உதவித்திட்டங்களிலும் திருமாங்கல்யம் செய்வதற்காக நடப்பிலிருந்து 4 கிராம் தங்கத்தை 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு படித்த மணப்பெண்ணிற்கு ரூ.25000 நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்வதற்காக 22 காரட் கொண்ட 8 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது, பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்ற பெண்ணிற்கு திருமண நிதி உதவியாக ரூ.50,000/-ம் திருமாங்கல்யம் செய்வதற்காக 22 காரட் கொண்ட 8 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் 2011-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏழு ஆண்டு கால சாதனையாக இம்மாவட்டத்தில் இதுவரை 39,905 பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். இவர்களில் 13,219 பேர் பட்டதாரிகள். 26,668 பேர் பட்டதாரி அல்லாத பயனாளிகளாகும்.இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து இதுநாள் வரையில் கடலூர் மாவட்டத்தில் 39,905 பயனாளிகளுக்கு ரூ.132,81,00,000 நிதி உதவியாகவும், மேற்படி பயனாளிகளுக்கு தலா 4 கிராம் மற்றும் 8 கிராம் வீதம் மொத்தம் 191 கிலோ 208 கிராம் தங்க நாணயங்களாகவும் வழங்கப்பட்டுள்ளது.தற்போது 2944 பயனாளிகளுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.9,30,75,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் அனைவரும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வாழ்வாங்கு வாழவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் கோ.அன்பழகி, கழக மருத்துவர் அணி மாநில தலைவர் எஸ்.பி.கே.சீனுவாசராஜா, கடலூர் நகர செயலாளர் ஆர்.குமரன், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.வி.ஜெ.முத்துக்குமாரசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிச்சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜெ.குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் காசிநாதன், மகளிரணி செயலாளர் நாகரத்தினம் , மாவட்ட கவுன்சிலர்கள் காடாம்புலியூர் தேவநாதன், ஒன்றிய கவுன்சிலர், ராஜேந்திரன், நகர அவைத்தலைவர் ஆர்.ராமச்சந்திரன், பொருளாளர் தனசேகரன், நகர கழக துணைச் செயலாளர் வ.கந்தன், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் என்.கே.ராஜூ, முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வம், ஆர்.வி.மணி, ஏ.கே.எஸ்.சேகர், அன்பு, பிருந்தாசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.