தற்போதைய செய்திகள்

கடவுள் மறுப்பு விஷயத்தில் இரட்டை வேடம், ஸ்டாலின் மெகா நடிகன் – அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு…

சென்னை:-

கடவுள் மறுப்பு விஷயத்தில் இரட்டைவேடம் போடும் ஸ்டாலின் ஒரு மகா நடிகர் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

கழக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் பா.ம.க வேட்பாளர் எஸ்.ஆர்.சாம்பால் போட்டியிடுகிறார். அவருக்கு தேர்தல் பணியாற்றுவதற்காக பல்வேறு இடங்களில் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் தேர்தல் பணிமனை திறப்பு விழா, பகுதி செயலாளர் நுங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கழகச் செயலாளர் தி.நகர் சத்யா எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தொகுதி பொறுப்பாளர்கள் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., கே.ஏ.கே.முகில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் டி.ஜெயக்குமார் பணிமனையை திறந்து வைத்து பேசியதாவது:-

கழகம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். இந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தோல்வி பயத்தால் மு.க.ஸ்டாலின் உளறி வருகிறார். கடவுள் மறுப்பு விஷயத்தில் இரட்டைவேடம் போடுகிறார். வீட்டுக்குள் வேட்டி கட்டி பட்டை அடித்து கொண்டு வெளியில் வந்து இந்து மதத்திற்கு எதிராக பேசுகிறார். அதே போல் துரைமுருகன் கல்லூரியில் நடந்த ரெய்டுக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை. அவர் எப்பொழுதும் தமாசாக பேசுவது போல் நாங்கள் பணத்தையும், நகையையும் வைத்ததாக கூறுகிறார். மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். எனவே எவர் மனதையும் புண்படும்படி பேசக்கூடாது. கடவுள் மறுப்பு விசயத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். அவர் ஒரு மெகா நடிகன்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா நகர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் டி.சிவராஜ், ரெட்சன் அம்பிகாபதி, பேரவை பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம், வட்டச் செயலாளர்கள் கேபிள் டிவி மாரி, பி.ராஜேஷ், கே.கபிலன், ஜார்ஜ், நிர்வாகிகள் பி.ராமமூர்த்தி, நுங்கை மூர்த்தி, நுங்கை மனோகர், இளையமாறன், எம்.சேகர், மன்சூர், அன்சார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.