சிறப்பு செய்திகள்

கட்சி பேதமின்றி 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி – தி.மு.க. உறுப்பினருக்கு முதல்வர் சூடான பதில்…

சென்னை:-

கட்சி பேதமின்றி 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  சட்டப்பேரவையில், கஜா புயல் மற்றும் பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியினால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவி வழங்குவது குறித்து அளித்த விளக்கம் வருமாறு:-

உறுப்பினர் பொன்முடி நான் அறிவித்தது சரியா இல்லையா என்பதை மட்டும் இந்த அவையிலே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். ஏன் என்று சொன்னால், இது ஏழை மக்களுக்காக வழங்கப்படுகின்ற திட்டம். இன்றைக்கு தொழிலாளிகள் காக்கப்பட வேண்டும். ஆகவே பல்வேறு மாவட்டங்கள் இன்றைக்கு வறட்சி மாவட்டங்களாக இருப்பது உங்களுக்கு நன்றாக தெரியும். உங்கள் மாவட்டத்தில் கூட பருவமழை சரியாக பெய்யவில்லை. ஆகவே, விவசாய தொழிலாளர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கப் பெறவில்லை.

அதேபோல, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் பல இடங்களிலே இன்றைக்கு கூட போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலே, வறுமையிலே இருக்கின்ற காரணத்தினாலே, அதையெல்லாம் ஆராய்ந்து தான் இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறோமே தவிர, இது தேர்தலுக்காக அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கின்ற அத்தனை பேருக்கும் கொடுக்கப்படுகின்றது. இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பார்த்துக் கொடுப்பதில்லை. நீங்கள் தவறான கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள். இது ஒட்டுமொத்தமாக தமிழகத்திலே இருக்கின்ற, உழைக்கின்ற உழைப்பாளிகளுக்கு, தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படுகின்ற நிதி என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, இதை அறிவித்தது தவறு என்று சொல்கிறாரா என்பதை மட்டும் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேரவையில் இவ்வாறு தெரிவித்தார்.