சிறப்பு செய்திகள்

கண்ணுக்கு தெரியாமல் ஊழல் செய்வதில் வல்லவர் ஆ.ராசா – மேட்டுப்பாளையத்தில் முதலமைச்சர் கடும் தாக்கு…

மேட்டுப்பாளையம்:-

கண்ணுக்குத் தெரியாமல் ஊழல் செய்வதில் நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வல்லவர் என்று மேட்டுப்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கழக வேட்பாளருக்கு வாக்குக்கேட்டு பிரச்சாரம் செய்தார்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கழக வேட்பாளர் எம்.தியாகராஜனை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில்  நடந்த பிரச்சாரத்தில் பேசினார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.தியாகராஜனை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பேசியதாவது: –

இந்தியாவிலே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு தி.மு.க.வினர் ஏராளமான தொந்தரவுகளை அளித்து வந்தனர். தி.மு.க.வின் அராஜகத்தை தாண்டி தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வந்தார். அம்மாவின் மறைவிற்கு பின் கழகத்தை உடைக்க மு.க.ஸ்டாலின் பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏக்கள் இடையே வாக்கெடுப்பு நடைபெற்ற போது தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நடனம் ஆடினர். இருப்பினும் கழகமே வெற்றிபெற்றது.

கழக ஆட்சியை கலைக்க சிலரை தூண்டிவிட்டு திமுக பல்வேறு பொய் வழக்குகளை தொடுத்தது. ஆனால் அத்தனை வழக்குகளையும் தவிடுபொடியாக்கி கழகம் ஆட்சியை தக்க வைத்தது. இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளிலும் கழகமே வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் கழக ஆட்சியில் என்ன நடந்தது என்று கேள்வி கேட்டுள்ளார். தி.மு.க.வின் திட்டங்களை கூறுவது கிடையாது. தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு பயனுள்ள திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

மேட்டுப்பாளையத்தில் ரூ.92 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரூ.99 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைக்க இரண்டாம் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனையில் கூடுதலாக படுக்கை வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லூரி ரூ.8 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் சுற்று வட்டார பிரிவுக்குட்பட்ட குளம் குட்டைகள் தூர்வார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்த போது ஊழல் செய்து சிறைக்குச் சென்றார். ஆ.ராசா கண்ணுக்குத் தெரியாமல் ஊழல் செய்வதில் வல்லமை படைத்தவர்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

பிரச்சாரத்தின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வான்மதி சேட், ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.