தற்போதைய செய்திகள்

கனிமொழி ஜெயிலுக்கு சென்றவர், தமிழிசை டாக்டருக்கு படித்தவர் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பிரச்சாரம்…

தூத்துக்குடி:-

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி 2ஜி வழக்கில் திகார் சிறைக்கு சென்றவர். பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் டாக்டருக்கு படித்தவர் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பிரச்சாரம் செய்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் பணியாற்றுகிறீர்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவர். திமுக மற்றும் டி.டி.விதினகரன் கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி உங்களிடம் வாக்கு கேட்க வருவார்கள். அவர்களை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும்.

இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி 2 ஜி ஊழல் வழக்கில் திகார் ஜெயிலில் இருந்து விட்டு வந்தவர்.ஆனால் நமது வேட்பாளர் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மீது எந்தவித குற்றச்சாட்டும் கிடையாது. டாக்டருக்கு படித்துள்ளார். நல்லவர் பண்பாளர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தத்தெடுத்துள்ள வெங்கடேசபுரத்தில் எந்தவித அடிப்படை வேலைகளும் நடந்ததாக தெரியவில்லை. இந்த பகுதி மக்கள் விருப்பப்படி தூத்துக்குடி- திருநெல்வேலி பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

பிரச்சாரத்தின்போது கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன். ஒன்றிய விவசாய அணி செயலாளர் வி.பி.ஆர்.சுரேஷ் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் சண்முகவேல், தூத்துக்குடி கூட்டுறவு வங்கி தலைவர் சு.ஞானராஜ், பாலமுருகன், நீலகண்டன், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.