கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் 1451 அங்கன்வாடி பணியாளர்கள் மேற்பார்வையாளர்களுக்கு கைப்பேசி – ந.தளவாய்சுந்தரம் வழங்கினார்

கன்னியாகுமரி:-

கன்னியாகுமரியில் 1451 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு கைப்பேசிகளை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 1401 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 50 மேற்பார்வையாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் கைப்பேசிகளை வழங்கி பேசியதாவது:-

மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் ஏழை எளிய வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக எவ்வித ஊட்டச்சத்து குறைபாடுமின்றி வளர்வதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளச்சித் திட்டத்தின் மூலம் எண்ணற்ற திட்டங்களை ஏற்படுத்தினார். அத்திட்டம் எவ்வித குறையுமின்றி, மிகவும் நேர்த்தியாக, தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

அங்கன்வாடி மூலம் தாய் சேய் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த மேலும் ஒரு மறுமலர்ச்சி திட்டம் இத்திட்டமாகும். பிறந்தது முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் வளர் இளம் பெண்கள் ஊட்டச்சத்து நிலையை கண்காணிக்க கைப்பேசி மூலம் விரைவான இணைய தள அமைப்பு வழங்கப்படுகிறது.

கைப்பேசி மூலம் ICDS- CAD செயலின் புதுமை புரட்சி ஆகும். குழந்தை கருவில் உருவான நாள்முதல் 1000 நாட்கள் அவர்களை கண்காணிக்க ஏதுவாக உடனடி தகவல் தொடர்பு கொள்வதற்காகவும், கடுமையான ஊட்டச்சத்து குறைவு, குள்ளத்தன்மை, குழந்தைகளின் தொடர் கவனிப்பு மற்றும் கண்காணிப்பினை பதிவேடுகளின் மூலம் பராமரிக்கும் வேலைப்பளுவை குறைத்து, பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் கைப்பேசி செயலிகள் மூலம் உள்ளங்கை அளவில், பணியை குறைப்பதற்காக ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது.

தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்திடுவதற்கான சேவை இதுவாகும். அங்கன்வாடி சேவை பகுதிகளில் குடும்பங்கள் கணக்கெடுப்பு, குடும்ப உறுப்பினர்களை ஆதாருடன் பதிவு செய்தல், பயனாளிகள் பட்டியலை செயலி மூலம் பெறுதல், உடனடி கவனிப்பு தேவைப்படும் சிசுக்கள் கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து சுகாதார பணிகள் வழங்குதல், கண்காணிப்பும் உடனடி தீர்வும் போன் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓர் டிஜிட்டல் புரட்சி இதுவாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 1401 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 50 மேற்பார்வையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்குவதன் மூலம் பொதுவான பயன்பாட்டு மென்போருள் மூலம் ஊட்டச்சத்து சீர்திருத்தங்கள் செய்யவும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்திடவும், அங்கன்வாடி மையத்தின் சேவைகளை மேம்படுத்திடவும், ரியல் டைம் கண்காணிப்பு அமைப்பு மூலம் செயல்படுத்திட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் வழியாக செயல்படுத்தப்படுகிறது. கைபேசிகள் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தங்களது பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கி.பேச்சியம்மாள், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையத்தலைவர் திமிர்த்தியுஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன், ஜெயச்சந்திரன் (எ) சந்துரு, சுகுமாறன், ரபீக் விக்ரமன், ஜெயசீலன், முன்னாள் தோவாளை ஒன்றிய பெருந்தலைவர் லதா ராமச்சந்திரன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.