கன்னியாகுமரி

கன்னியாகுமரி தொகுதியில் கழக வேட்பாளரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம் – என்.தளவாய்சுந்தரம் சூளுரை…

கன்னியாகுமரி:-

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் சுவாமியார்மடம் வசந்த மாளிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவருமான டி.ஜாண்தங்கம் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், கழக அமைப்பு செயலாளருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார்.

அப்போது என்.தளவாய்சுந்தரம் பேசியதாவது:-

இங்கு நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டம் கழகத்தினரின் குடும்ப விழாவாக நடைபெறுகிறது. விரைவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணியை அமைத்த பெருமை முதல்வரையும், துணைமுதல்வரையும் சாரும். கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் கூட்டணி அமைந்து வருகிறது. கழகம் சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக இருந்தாலும் அவர்களது வெற்றிக்காக உண்மையாக உழைக்க வேண்டும். தற்போது புரட்சித்தலைவி அம்மா நம்மிடம் இல்லை. ஆனால் இன்றைக்கு கழகத்தையும், ஆட்சியையும் அம்மா வழியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் கழக ஆட்சியை ஏதாவது குறை சொல்லி அகற்றிவிடலாம் என தினம்தோறும் எதையாவது உளறிக் கொண்டே இருக்கிறார் ஸ்டாலின். இந்த ஆட்சி ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதம் தாங்காது என சொன்னார். ஆனால் புரட்சித்தலைவி அம்மா ஆசியோடு 3-ம் ஆண்டை நோக்கி வீரநடை, வெற்றிநடை போட்டு வருகிறது. இதயதெய்வம் அம்மா சட்டமன்றத்தில் சொன்னது போல் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை அள்ளித்தந்தது கழக அரசு. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை எளிய விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் என பல தரப்பினர் பயன் பெறுவார்கள். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று இதயதெய்வம் அம்மா சொன்னார். அவரின் வாக்குறுதியை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. மக்களுக்கு சேவை செய்யவே தொடங்கப்பட்ட இயக்கம் நமது இயக்கம்.

இலவச அரிசி, தாலிக்கு தங்கம், மாணவ மாணவிகளுக்கு இலவச மடிகணினி, விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா வெள்ளாடுகள், என இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் நமது தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளன. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற இலவச திட்டங்கள் இல்லை. மக்களுக்காக உழைத்தவர்களை மக்கள் மதிக்க வேண்டும். அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். அதேபோன்று நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக்கியது, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைக்கு அவர் பிறந்த ஊரான தேரூரில் 1 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்க உத்தரவு பிறப்பித்தது.

திருவட்டார், கிள்ளியூர் என 2 தாலுகாக்களை நமது மாவட்டத்திற்கு தந்தது, என கழக அரசின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். எனவே விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் கழகம் தலைமையில் உள்ள கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியில் கழகம் சார்பில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளரை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கே.ஏ.சலாம் வரவேற்புரையாற்றினார். கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட பால்வளப் பெருந்தலைவருமான எஸ்.ஏ.அசோகன், அவைத்தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட இணைச் செயலாளர் மேரி கமலபாய், துணைச்செயலாளர் சத்யாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தின் போது காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 44பேர் மரணம் அடைந்தனர். இதனை வன்மையாக கண்டிப்பதுடன் உயிர்தியாகம் செய்த தியாக வீரர்கள் 44 பேர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது, புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் அம்மா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, 150 இடங்களில் புதிய கொடி கம்பங்களில் கழக கொடியேற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம், வழங்குவது, இரத்த தானம் செய்தல், படகு போட்டி நடத்துதல், பொதுக் கூட்டங்கள், நடத்துவது என பல நிகழ்ச்சிகள் 10 நாட்கள் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் பிறந்த தமிழ் அறிஞர், கவிஞர் போற்றுதலுக்குரிய கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைக்கு 1 கோடி ரூபாய் செலவில் அவரது பிறந்த ஊரான தேரூரில் மணிமண்டபம் கட்ட ஆணை பிறப்பித்த முதலமைச்சர், துணைமுதலமைச்சர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.