கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை – கண்காணிப்பு அலுவலர் தகவல்…

கன்னியாகுமரி:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருமான பி.ஜோதிநிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருமான பி.ஜோதிநிர்மலாசாமி , மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர், ரூ.251 கோடி மதிப்பில், நாகர்கோவில், கிருஷ்ணன்கோவிலில் அம்ருத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், நாகர்கோவில், எஸ்.எல்.பி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கட்டப்பட்டு வரும் 8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலசங்கரன்குழி ஊராட்சி, பாம்பன்விளை பன்றிவாய்க்கால் ஓடையில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட போர்வெல் மற்றும் பம்பிங் லைன், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம், முட்டம் ஊராட்சியில் பொதுநிதியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் தரைமட்ட நீர் தேக்க தொட்டியினை சுற்றி ரூ.5 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் அமைக்கும் பணி ஆகிவற்றையும் பார்வையிட்டனர்.

மேலும், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், மத்திக்கோடு ஊராட்சியில், வறட்சி நிவாரணம் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் மக்காணிபொத்தை பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, மாங்கோடு மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் இணைத்து குடிநீர் வழங்கும் பணி, திருவிதாங்கோடு நுள்ளிவிளையில் மூன்றுகிணறு சந்திப்பில் கிணறு அமைத்து, அதன்மூலம் குடிநீர் வழங்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பி.ஜோதிநிர்மலாசாமி பேசியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு என்பது இல்லை. சில இடங்களில் குடிநீர் வழங்கக்கூடிய குழாய்கள் மற்றும் மோட்டார்கள் சீரமைத்து, தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஊராட்சி மற்றும் பேருராட்சிக்குட்டப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்காக ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்க, முதலமைச்சர் அண்மையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அனைத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, இப்பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் குடிநீர் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள, அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து ஏதேனும் குடிநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் வரப்பெற்றால், அப்பகுதிகளுக்கு நேரில் சென்று, உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்து, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். இப்பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எவ்வித காலதாமமும் ஏற்படுத்தக் கூடாது. மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு நீராதாரங்கள் உள்ளன. அவற்றை உரிய முறையில் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு தடையின்றி அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வழங்குவதில் அலுவலர்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஏ.ஆர்.ராஹல்நாத், சார் ஆட்சியர் (பத்மநாபபுரம்) ஷரண்யா அறி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.