தற்போதைய செய்திகள்

கமல் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி…

தூத்துக்குடி:-

பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசும் கமல் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு சமுதாய சீர்கேட்டை உருவாக்கும் வகையிலும், மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார். என்னை பதவி விலக சொல்லுவதற்கு கமல்ஹாசன் கட்சி ஒன்றும் ஐநா சபையின் அங்கீகாரம் பெற்ற கட்சி கிடையாது. நான் எங்கும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசவில்லை. இந்திய நாட்டின் முதல் தீவிரவாதி இந்து என கமல்ஹாசன் எப்படி சொல்லலாம்.

இலங்கையில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த ஒருவன் தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளான். இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தன் பிள்ளைகள் செத்தால் கூட கவலைப்படுவதில்லை அந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளனர். ஒரு மதத்தை கூறி தீவிரவாதம் என்று யார் சொல்வதையும் அனுமதிக்க முடியாது. தீவிரவாதிகள் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு குறிப்பிட்ட ஒரு மதம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. எல்லா மதத்தினரும் பாதிக்கப்படுகின்றனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் கூறியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்து இந்துக்களை வம்புக்கு இழுக்கின்ற வேலை. இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபடவும் கூடாது, பேசவும் கூடாது. கமல்ஹாசன் யாரை திருப்திப்படுத்த இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறினார். ஐஎஸ் தீவிரவாதிகளிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிக் கொண்டு பேசுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இரு மதத்திலும் ஏன் சண்டை இழுத்து விட நினைக்கின்றார். கமல்ஹாசனை மத்திய உளவுத்துறை கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும்.

ஒரு மேடையில் சாதாரண ஒருவர் பேசினால் அது பெரிய செய்தியாக வராது. கமல்ஹாசன் நடிகர் என்பதால் அவரது பேச்சு பெரிதாக பேசப்படும். கமல்ஹாசன் தவறான பேச்சை கண்டிக்காவிட்டால் அவர் பேசிக் கொண்டே இருப்பார். என்னிடம் சில இஸ்லாமிய, கிறிஸ்தவ தலைவர்கள் பேசினார்கள். என்னுடைய கருத்தை அவர்கள் வரவேற்றனர். எல்லா மதத்திலும் மத ஆர்வலர்கள் இருப்பார்கள். அவர்களை தூண்டிவிடும் வகையில் கமல்ஹாசன் பேசக்கூடாது.

நாக்கை நான் அறுப்பேன் என்று கூறவில்லை. நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்றுதான் கூறினேன். கமல்ஹாசன் பேச்சு நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டிவிடும். அதைத்தான் நான் கண்டித்தேன். பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயல்படும் கமல்ஹாசனின் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.